புதுச்சேரி

தண்ணீரின் தரம் குறித்து மாணவர்கள் ஆய்வு

DIN

தேசிய கண்டுபிடிப்பு வாரத்தையொட்டி காரைக்கால் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீரின் தரமறிதல் குறித்த ஆய்வில் மாணவர்கள் பங்கேற்றனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த கல்வித்துறை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி தேசிய  கண்டுபிடிப்பு வாரம்  என அறிவிப்பு செய்தது. அக்.29 முதல் நவ.2 வரையிலான நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹே, யேனாம் பிராந்தியங்களில் தலா ஒரு பள்ளியும், புதுச்சேரியில் மூன்று பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுத் தலைப்பான தண்ணீரின் தரமறிதல் குறித்து ஆய்வுப் பணியில் மாணவர்களை ஈடுபடச் செய்தது.
காரைக்காலில்  தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. பள்ளியின் வேதியியல் ஆய்வகத்தில் உயர்நிலை, மேல்நிலை மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ஆய்வுப் பணிகள், பல்வேறு நாள்களில் நடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணி நிறைவடைந்தது.
முன்னதாக இந்த ஆய்வுப் பணியை பள்ளி துணை முதல்வர் கே.கோவிந்தராஜன் தொடங்கிவைத்தார். பள்ளி வேதியியல் விரிவுரையாளர் எஸ்.சித்ரா மற்றும் எஸ்.சாமுண்டீஸ்வரி வழிகாட்டலில், 9, 10, 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 6 பகுதிகளில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.
குளிக்கும் சோப்புடன் நீரின் நுரைக்கும் தன்மை, ஹைட்ரஜன் அயனிச்செறிவு (பிஎச்) மற்றும் நீரின் மொத்த உப்புத் தன்மை என்ற மூன்று பிரிவுகளில் மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். 
குளிக்கும் சோப்புடன் நுரைக்கும் தன்மையை அளவிடுவதன் மூலம் அதிக நுரை தந்தால் மென்னீர் எனவும், குறைவான நுரை தந்தால் கடின நீர் எனவும் வகைப்படுத்தப்பட்டன. பிஎச் கண்டுபிடித்தலின் மூலம் தண்ணீரின் அமிலத்தன்மை, நடுநிலைத்தன்மை, காரத்தன்மை அறியப்பட்டன.
மொத்த உப்புத் தன்மை சோதனை மூலம் ஹைட்ரோ குளோரிக் அமிலத்துக்கு எதிராக தண்ணீர் மாதிரியை மெத்தில் ஆரஞ்சு நிறங்காட்டி உதவியுடன் தரம் பார்த்தல் நிகழ்த்தப்பட்டது. இதன் மூலம் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் அளவு கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஆய்வு குறித்து விரிவுரையாளர் எஸ்.சித்ரா கூறும்போது, இந்த ஆய்வின் முடிவுகள் கூகுள் படிவத்தில் ஆன்லைனில் என்சிஇஆர்டிக்கு அனுப்பப்படுகின்றன. 
தங்கள் பகுதி நீரின் தரத்தை மாணவர்களே ஆய்வு செய்து அறிவதன் மூலம் சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது என்றார். 
பள்ளி துணை முதல்வர், வேதியியல் விரிவுரையாளர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர் எஸ்.மகாதேவன், நூலகர் வைத்தியநாதன், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆய்வுக் குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
ஆய்வு குறித்து மாணவர்கள் தங்களது அனுபவங்களை பிற வகுப்பு மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT