புதுச்சேரி

பாஜக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

DIN

மத்திய பாஜக அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் செயலில் மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் ஈடுபடவேண்டும் என்றார் வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்.
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மாணவர் காங்கிரஸ் அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:
காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்புகளில் ஒன்றான மாணவர் அமைப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது. மாணவர் அமைப்பில் உள்ளவர்கள் கடினமாக உழைத்தால் நாட்டில் பல்வேறு பதவிகளுக்கு வரமுடியும். ஆனால், பதவியை எதிர்பார்த்து மட்டும் அமைப்பினர் செயல்படக் கூடாது.  மாணவர் அமைப்பினர் பங்கெடுக்காத ஒன்றே இல்லை என கூறும் அளவில் பங்களிப்பு இருக்கவேண்டும்.
ஜாதி, மதம் பார்க்காமல் செயல்படும் கட்சி காங்கிரஸ். தேச நலனுக்கு காங்கிரஸின் பங்களிப்பு எப்படி இருந்துள்ளது, இருந்து வருகிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
18 வயதில் வாக்குரிமை என்பதை ராஜீவ் காந்திதான் அமல்படுத்தினார். 50, 60 வயதில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களையெல்லாம் தற்போது மாணவர்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு உலகம் மாறியிருக்கிறது. எனவே, மாணவர்கள் கல்வியிலும், பிற செயல்களிலும் அறிவாற்றலை விரிவுப்படுத்திக்கொண்டே வரவேண்டும்.
இந்திரா காந்தி 12 வயதில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பை ஏற்படுத்தினார். அஸ்ஸாம் மாநிலத்தில் மாணவர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, பல்வேறு போராட்டத்துக்குப் பின்னர், மாணவர் அமைப்பினரே முதல்வராக பதவி வகிக்கும் நிலை உருவானது. எனவே, மாணவர்கள் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதுடன், கிராமத்தில், சுற்று வட்டாரத்தில் உதவும் செயலில் ஈடுபட வேண்டும்.
இளைஞர்களிடையே உதவும் மனப்பான்மை, விட்டுக் கொடுத்தல், தேசத்தின் மீதான பற்று போன்றவை ஏற்பட வேண்டும்.
மாணவர்களுக்காக தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஏராளமான வசதிகளை புதுச்சேரி அரசு செய்துத் தருகிறது. இது காங்கிரஸால் கொண்டு வரப்பட்ட திட்டம். மத்தியில் பாஜக அரசின் தவறான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பாதித்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மீளமுடியாதோர் அதிக சதவீதத்தினர் உள்ளனர். நாட்டின் பொருளாதாரம் பிரதமர் நரேந்திர மோடியின் தவறான செயல்பாடுகளால் பாதித்துவிட்டது. வேலைவாய்ப்பின்மை பெருகிவிட்டது.
எனவே, அரசியல் கட்சியாக செயல்படாமல், மாணவர் அமைப்பாக கல்விக்கான உதவி, கட்டுமானங்கள், பேருந்து வசதி, கிராம முன்னேற்றம் போன்றவற்றை அரசிடமிருந்து பெற்று மக்களுக்குத் தரும் வகையில் தமது பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாஜக அரசின் தவறுகளை மக்களிடத்தில் தகுந்த முறையில் மாணவர் அமைப்பினர் கொண்டு செல்ல வேண்டும். எந்த  சூழலிலும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். தியாகத்தால் உருவான தேசத்தில், தியாகத்தின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே ஏற்படவேண்டும் என்றார் அமைச்சர் கமலக்கண்ணன்.
மாவட்டத் தலைவர் ஜெம்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர்கள் விக்ரம், ரவீந்திரன், இந்திரஜித், தமிழழகன், பொதுச்செயர்கள் சரவணக்குமார், ஹரிஷ், மாவட்ட செயலர் யோகேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் அ.பாஸ்கரன், மாநில துணைத் தலைவர் மோகனவேல், வடக்குத் தொகுதி தலைவர் ஆர்.பி.சந்திரமோகன், திருப்பட்டினம் தலைவர் செல்வமணி, கோட்டுச்சேரி பகுதி சேதுராமன், சிறுபான்மைத் துறை மாவட்டத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் உள்ளிட்டோர் பேசினர்.
ஏற்பாடுகளை  கிளிண்டன் சோழசிங்கராயர், சிவபாலன், திருநள்ளாறு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 2 ஆண்டு நிறைவையொட்டி கருப்பு தினமாகக் கருதி, கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய 
அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT