ஜிப்மரில் ஆஸ்டமி தினம் கடைப்பிடிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் சர்வதேச ஆஸ்டமி தின விழிப்புணர்வு தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி ஜிப்மரில் சர்வதேச ஆஸ்டமி தின விழிப்புணர்வு தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
உலகம் முழுவதும் ஆஸ்டமியைப் பற்றிய விழிப்புணர்வையும்,  நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே கல்வி மற்றும் மறுவாழ்வு பற்றி அறிவுறுத்துவதற்காக ஆஸ்டமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் நோயாளிகளுக்கு இலைத்துளை (ஸ்டோமா) உருவாக்கப்படுகிறது. புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட பிறகு, பெருங்குடல் வழியாக மலம்,  வயிற்று சுவரின் மேற்பகுதியில் வெளியேறுமாறு அமைக்கப்படுகிறது. இதனால் நோயாளிகளும், அவரின் குடும்பத்தினரும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகளுக்குள்ளாகின்றனர். அவர்களுக்கு, அவ்வப்போது மனரீதியாகவும்,  சமூகரீதியாகவும் ஆதரவு தேவைப்படுகிறது.
ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சைத் துறை மற்றும் செவிலியர் துறை இணைந்து தனது 6-ஆவது ஆஸ்டமி தினத்தை கடைப்பிடித்தது. விழாவில், குடலியல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் பிஜு பொட்டாகாட் வரவேற்றார். 
ஜிப்மர் இயக்குநர் டாக்டர் விவேகானந்தம் விழாவைத் தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஸ்டோமா பராமரிப்பு சேவை ஜிப்மரில் ஸ்டோமா கிளினிக் வழியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் துறையில் சிறப்பாக பயிற்சி பெற்ற செவிலியர் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த செவிலியர்களே சம்பந்தப்பட்ட நோயாளிகளின் தேவைகளையும் அதனை சார்ந்த கல்வியையும், ஆலோசனைகளையும் அளிக்கின்றனர் என்றார் விவேகானந்தம்.
 ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே வாழ்த்துரை வழங்கினார். செவிலியர் மேற்பார்வையாளர் சங்கரீஸ்வரி,  ஜிப்மரில் வழங்கப்படும் ஸ்டோமா சேவையை பற்றி சுருக்கமாகப் பேசினார். விழாவைத் தொடர்ந்து ஸ்டோமா பற்றிய அறிவியல் நுணுக்கங்கள் விவாதிக்கப்பட்டன.  குடல் அறுவை சிகிச்சை உதவி மருத்துவர் செந்தில்,   வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஸ்டோமா செவிலியர் ஐடா நிர்மல், அப்போலோ மருத்துவமனை ஸ்டோமா செவிலியர் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 ஜிப்மரில் வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஸ்டோமா செவிலியருக்கான பிரத்யேக சான்றிதழ் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.  இறுதியில்,  ஜிப்மர் ஸ்டோமா செவிலியர் பிரியா கிரேஸ் பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com