புதுவையில் 5,358 பேர் முகாம்களில் தஞ்சம்

புதுவையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5,358 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5,358 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 கஜா புயலின் காரணமாக காரைக்காலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் வெ.நாராயணசாமி, காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கஜா புயலை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தை தயார் நிலையில் வைத்திருந்தோம்.
 புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகம் இல்லாததால் பெரிய அளவிலான சேதம் இல்லை. சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஓர் இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார். விழுந்த மரங்களை அகற்றவும், சாய்ந்த மின் கம்பங்களைச் சரி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம்.
 காரைக்காலில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின் விநியோகத்தில் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 காரைக்காலில் கஜா புயலின் தாக்கம் அதிகம். இதனால், மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 5,358 பேர் சமுதாய நலக் கூடங்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. காரைக்கால் பிரதான சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. உடனடியாக மின்சாரம் கொடுக்கும் பணி, சாலை சரி செய்யும் பணி, உணவு கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
 சேதத்தைக் கணக்கிட்டு அறிக்கை தர மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளேன்.
 ஆட்சியர், துணை ஆட்சியர், புதுச்சேரியில் இருந்து அனுப்பப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியும் இரவு முழுவதும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். புதுச்சேரியில் அதிக மழை இல்லாததால், நிவாரண முகாம்களுக்கு யாரும் வரவில்லை என்றார் நாராயணசாமி.
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com