"கஜா' புயல் நிவாரணம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

"கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக புதுவை முதல்வர்

"கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கஜா புயல் தாக்குதலால் தமிழகம், புதுவையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தில் புதுச்சேரியில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும், காரைக்கால் பிராந்தியத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மரங்கள்,  நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
 புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மாலை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்தம் 1,445 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட காரைக்கால் பிராந்தியத்தை முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் பணி 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட பாதிப்பு குறித்து அறிக்கை வழங்கும்படி, மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம்,  மல்லாடி கிருஷ்ண ராவ்,  மு.கந்தாமி,  ஷாஜகான்,  ஆர்.கமலக்கண்ணன்,  அரசு செயலர்கள் அன்பரசு,  கந்தவேலு,  மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் செளத்ரி மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும், மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவது, மீட்புப் பணிகளுக்கு தேவைப்படும் நிதி, மீனவர்களுக்கான நிதியுதவி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், புயல் நிவாரண நிதி கேட்டு இடைக்கால அறிக்கையை ஓரிரு நாளில் அனுப்பவும், மத்திய அரசிடம் பேசி நிவாரணத் தொகையை விரைந்து பெற நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com