புதுவை முதல்வரின் நிலை ஆணை சட்ட விரோதமானது: ஆளுநர் கிரண் பேடி கருத்து

 புதுவை நிதித் துறைச் செயலரின் சுற்றறிக்கைக்கு எதிரான முதல்வர் நாராயணசாமியின் நிலை ஆணை சட்ட விரோதமானது என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார். இந்த ஆணையைத் திருத்தி முறைப்படி வெளியிடும்படி முதல

 புதுவை நிதித் துறைச் செயலரின் சுற்றறிக்கைக்கு எதிரான முதல்வர் நாராயணசாமியின் நிலை ஆணை சட்ட விரோதமானது என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
இந்த ஆணையைத் திருத்தி முறைப்படி வெளியிடும்படி முதல்வர் நாராயணசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
புதுவை நிதித் துறைச் செயலர் கந்தவேலு நிதி அதிகாரம் தொடர்பாக அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில், மானிய நிதியை பொருத்தவரை ஆளுநருக்கு மட்டுமே முழு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி அந்தச் சுற்றறிக்கையை சனிக்கிழமை திடீரென ரத்து செய்வதாக நிலை ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். தன்னுடைய நிலை ஆணை மட்டுமே செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, நிதித் துறைச் செயலர் கந்தவேலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், முதல்வர் நாராயணசாமியின் நிலை ஆணையை ஏற்க இயலாது என்றும், 1978-ஆம் ஆண்டு மத்திய அரசின் பொது நிதிச் சட்ட விதி, புதுவை யூனியன் பிரதேசம் 1963 அலுவல் விதி ஆகியவற்றின்படி, நிதியைக் கையாளும் அதிகாரம் மாநில நிர்வாகிக்கு (துணைநிலை ஆளுநர்) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், மத்திய பொது நிதிச் சட்ட விதி 20-இன்படி மானிய நிதியைக் கையாளும் முழு அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உண்டு என்றும் தெரிவித்தார்.
முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட நிலை ஆணை குறித்து புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது கட்செவி அஞ்சலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவிட்ட தகவல் வருமாறு:
புதுவை முதல்வர் நாராயணாமி சனிக்கிழமை வெளியிட்ட நிலை ஆணை சட்ட விரோதமானது. புதுவை யூனியன் பிரதேச அலுவல் விதிகளுக்கு எதிரானது. ஏற்கெனவே இருக்கும் சட்டங்களை நிலை ஆணையைக் கொண்டு முதல்வரால் மாற்ற இயலாது. நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டத்தை மாற்ற முடியும். அவர், இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். எவ்விதக் குழப்பமும் ஏற்படாத வகையில் நிதிச் செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எனவே, தனது தவறான நிலை ஆணையைத் திருத்தி வெளியிடும்படி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். நிதி விதிகளை மீற எண்ணுவது சரியாக இருக்காது என்பதை முதல்வர் நாராயணசாமி புரிந்து கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com