மின் தடையை அறிய உதவும் செயலி விரைவில் அறிமுகம்

மின் தடையை அறிய உதவும் செயலி புதுவையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


மின் தடையை அறிய உதவும் செயலி புதுவையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மின் துறை கிராமக் கோட்டம் (வடக்கு) செயற்பொறியாளர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் மின் துறை அமைச்சகத்தால் மின்சார நண்பன் (உர்ஜா மித்ரா) என்னும் மின் தடை அறிவிப்பு மேலாண்மைத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை புதுவை மாநில மின் நுகர்வோர் அனைவருக்கும் செயல்படுத்த புதுவை அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் புதுவை யூனியன் பிரதேசம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் தடை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல், செல்லிடப்பேசி அறிவிப்புகள் மூலம் தெரிவிக்கப்படும். ஆன்ட்ராய்டு செயலி வழியாக அனைத்து மின் நுகர்வோர்களுக்கு மின் தடை குறித்து அறிந்து கொள்ள வசதி செய்கிறது.
மேலும், மின் துறையினர் இந்தச் சேவையின் மூலம் மின் தடையின் நேரம், காரணத்தை நுகர்வோர்களுக்கு தெரிவிக்க இயலும். மின்சார நண்பன் திட்டத்தின் முக்கிய அம்சம், மின் தடை ஏற்படும் நேரம், தேதி அவ்வப்போது குறுஞ்செய்தி, மின்னஞ்சல், செல்லிடப்பேசி வழியே தெரிவிக்கப்படும். மின் தடை குறித்த தகவல்களை மின் நுகர்வோர் மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு மையம் மூலம் தெரிவித்து மின் இணைப்பை வலுப்படுத்தி, சேவையைத் திறம்பட செயல்படுத்த முடியும்.
மின் தடை காலத்தை நீடித்தல், பழுது நீக்கல், ரத்து செய்தல், காலம் மாற்றி அமைத்தல் போன்ற செயல்பாடுகளையும் தெரிவிக்கலாம். மின் கணக்கீட்டு அமைப்புடன் ஒருங்கிணைந்து மின் தடை தகவல்களை உரிய மின் துறை அதிகாரியிடம் அறிவுறுத்தலாம். இதன் முதல் கட்டமாக மின் நுகர்வோர்களின் செல்லிடப்பேசி எண்களை மின்சாரத் துறை கணக்கீட்டாளர் மாதந்தோறும் கணக்கு எடுக்க வரும் போது, சேகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, வீட்டின் உரிமையாளர்கள், குடியிருப்போர் அனைவரும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தங்களது செல்லிடப்பேசி எண்ணை மின் கணக்கீட்டாளரிடம் தந்து மின் துறைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com