மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நல்ல மாற்றம் ஏற்படும்: புதுவை முதல்வர் நம்பிக்கை

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த ஆண்டு நிச்சயமாக நல்ல மாற்றம் ஏற்படும் என்று புதுவை முதல்வர் வே. நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த ஆண்டு நிச்சயமாக நல்ல மாற்றம் ஏற்படும் என்று புதுவை முதல்வர் வே. நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
புதுவை கூட்டுறவுத் துறை, மாநில கூட்டுறவு ஒன்றியம் சார்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற 65-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசுகளை வழங்கி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: கூட்டுறவு நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நோக்கத்துக்காக தொடங்கப்பட்டவை. நஷ்டத்தில் இயங்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்படவில்லை. அதிகப்படியான ஆள்களை நியமனம் செய்ததால் அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்தன. செலவு அதிகம்,  வருவாய் குறைவு என்பதால்தான் கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்தன. நிறுவனங்களைச் சீரமைக்க  விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.
அனைத்துத் தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பி அரசு நிறுவனங்களை மூட முடியாது.  மூடினால் தொழிலாளர்களின் நிலை என்னவாகும் என்பது மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான் புரியும். லாபகரமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளுநர் தலைமையில் நடைபெற்ற திட்டக் குழுக் கூட்டத்தில் கூட்டுறவு, அரசு சார்பு நிறுவனங்களை நடத்துவதற்கு ரூ.786 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், ரூ.326 கோடி ஊதியத்துக்கு என ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதை நிதிநிலை அறிக்கையிலும் இடம் பெறச் செய்து மத்திய உள்துறை அமைச்சகமும்,  நிதி அமைச்சகமும் ஒப்புதல் அளித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. தில்லியைப் போல புதுவைக்கும் நிதி அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன். அதையேற்று உள்துறை அமைச்சகமும் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவையே செயல்படுத்தாமல் உள்ளனர்.
பாப்ஸ்கோ, பாசிக்கு நிறுவனங்களுக்கு 25-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கான உரிமம் உள்ளது. அதை கீழ் குத்தகைக்கு விட்டால் ரூ.80 முதல் ரூ.90 கோடி கிடைக்கும். ஆனால், அதற்கான கோப்பும் அனுமதியின்றி திருப்பி அனுப்பப்படுகிறது. தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் எண்ணம் இல்லை. அதே நேரத்தில், அரசு நிறுவன, கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தை ஊதியமாகப் பெறுகிறோம் என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். லாபம் ஈட்டாவிட்டாலும் நஷ்டத்துக்குச் செல்லக் கூடாது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக நல்ல மாற்றம் ஏற்படும் என்றார் நாராயணசாமி.
நிகழ்ச்சியில், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, அரசின் தில்லி பிரதிநிதி ஜான்குமார் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

5 கூட்டுறவு நிறுவனங்களில் மட்டுமே லாபம்
புதுச்சேரியில் 5 கூட்டுறவு நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்குகின்றன என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் வேதனை தெரிவித்தார்.
கூட்டுறவு வார விழாவில் அவர் மேலும் பேசியதாவது: மாஹேவில் கூட்டுறவு நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. புதுச்சேரியில் அதுபோல இல்லாதது வருத்தம் அளிக்கிறது.  புதுச்சேரியில் உள்ள 500 கூட்டுறவு நிறுவனங்களில் 5-இல் மட்டுமே லாபம் ஈட்டப்படுகிறது.  நியாய விலைக் கடைகளில் அரிசி வழங்கினால்தான் கமிஷனைப் பெற்று ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியும். தற்போது அரிசி வழங்கவில்லை. ஆனால், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் கேட்கின்றனர். சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஊதியமும்,  போனஸும் வழங்க முடியவில்லை.  அதற்குத் தீர்வும் இல்லை. 
23 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் இருந்த முதல்வர் நாராயணசாமியால் புதுவையில் உள்ள 13 லட்சம் மக்களுக்கு முதல்வராக பணியாற்ற முடியவில்லை. 
அதற்கானக் காரணத்தையும், தடைகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தியதன் மூலம் புதுவையில் கூடுதலாக ரூ.500 கோடி செலவு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் தனிக் கணக்கு தொடங்கியதால் மத்திய அரசின் மானியம் 25 சதவீதமாக குறைந்தது. திறமைசாலி அமைச்சர்கள் இருந்தாலும் நிதி இல்லாமல் என்ன செய்ய முடியும்?  தெளிவான முடிவு எடுத்தால்தான் கூட்டுறவு, அரசு நிறுவனங்களை மேம்படுத்த முடியும்.  
அந்த முடிவு தற்போது கஷ்டமாக இருந்தாலும், எதிர்காலத்துக்கு சிறந்ததாக இருக்கும். கூட்டுறவுக்கு தனி அதிகாரம் உள்ளது. யாரும் கட்டுப்படுத்த முடியாது.  நாம் லாபம் ஈட்டினால் நாமே முடிவு எடுக்க முடியும் என்றார் கந்தசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com