பாஜக அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்தை நிராகரிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வேண்டுகோள்

புதுவையில் நவ.26-ல் பாஜக அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்தை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுவையில் நவ.26-ல் பாஜக அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்தை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
 இது குறித்து அந்தக் கட்சியின் பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 புதுவை பாஜக, ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பொய்யான காரணத்தை முன்னிறுத்தி பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயத்தை தனது அரசியலுக்கு திருப்பிவிட முயற்சிக்கிறது. கேரளத்து இடது முன்னணி ஆட்சியில் அனைத்து மதம் சார்ந்த கோயில், மசூதி, தேவாலயங்களும் பாதுகாக்கப்பட்டன. மேலும், முந்தைய அரசுகளை விட கூடுதல் நிதி ஒதுக்கி பக்தர்களின் வசதிக்காக அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை பாஜக, காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன.
 ஆனால், தற்போது வலதுசாரி கொள்கை உடையவர்கள் தனது அரசியல் ஆதாயங்களுக்காக திட்டமிட்டு வன்முறையை நடத்தி வருகின்றனர். 12 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு தொடர்ந்தது ஆர்எஸ்எஸ் அமைப்புகள்தான். இவ்வழக்கில் 100 வழக்குரைஞர்கள் ஆஜராகியிருந்தனர். ஆனால், அவர்களில் ஒருசிலர் மட்டுமே பெண்கள் கோயிலுக்கு செல்வதற்கு எதிராக வாதிட்டனர்.
 கேரள அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் பாலின சமத்துவ உரிமைகளுக்காக நிற்கிறோம். ஆயினும் இது மத நம்பிக்கையின் அடிப்படையான விஷயம். ஆதலால், இந்து தர்ம சாஸ்திரத்தில் அறிவுள்ளவர்களைக் கொண்டு ஓர் ஆணையம் அமைக்க வேண்டும் என முன்மொழிந்திருந்தது. மேலும், இது தொடர்பாக சட்டம் இயற்ற எந்தத் திட்டமும் இல்லை என்பதையும் குறிப்பிட்டு நீதிமன்றம் சொல்கிற கட்டளையை பின்பற்றுவோம் என்று குறிப்பிட்டது.
 இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவது தவிர மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசுக்கு வேறுவழியில்லை. ஜனநாயக நாட்டில் எந்த ஒரு அரசும் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டியது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.
 அதற்காக அனைத்து வயது பெண்களும் கோயிலுக்கு வர வேண்டும் என்கிற வேண்டுகோளையோ, அணிதிரட்டலையோ செய்யவில்லை. ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூக அமைப்பையோ உருவாக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும். அவ்வாறு உருவாக்கப்பட்ட நம் சமூக அமைப்பை சீர்குலைக்க முயலும் இழிவான அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டுகிறோம். ஆகவே, புதுச்சேரியில் நடைபெற உள்ள பாஜகவின் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ராஜாங்கம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com