புயல் நிவாரணத்தை அதிகப்படுத்தி வழங்க அதிமுக வலியுறுத்தல்

புயல் நிவாரணத்தை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

புயல் நிவாரணத்தை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புதுவையில் அரசு சார்பில் மீனவர் தின விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது முதல் மீனவர் தின விழா கொண்டாடப்படுவதில்லை. மாநில அரசு மீனவ மக்களுக்கு சிறு சிறு நலத் திட்ட உதவிகளைக்கூட வழங்காமல் உள்ளது.
 முதியோர் உதவித்தொகைக்காக 1,550 பேர் விண்ணப்பத்திருந்தும் இதுவரை வழங்கப்படவில்லை. விடுபட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கவில்லை.
 முதல்வரும், அமைச்சர்களும் காரைக்கால் சென்று ஆய்வு செய்துவிட்டு வந்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை சேதமதிப்பு கணக்கிடப்படவில்லை.
 முதல்வர் நாராயணசாமி புயலால் பாதிக்கப்பட்ட காரைக்காலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.187 கோடி கேட்டுள்ளார். ஆனால், மக்களுக்கு ரூ.4.95 கோடி அளவுக்கு மட்டுமே நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். காரைக்காலில் மொத்தம் 60 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர். அவர்களில் 27,800 சிவப்பு அட்டைதாரர்கள் உள்ளனர்.
 அவர்களுக்கு மட்டுமாவது புயல் நிவாரணமாக தலா ரூ.7,500 வழங்க வேண்டும். முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.2 லட்சமும், பகுதி சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.ஒரு லட்சமும் வழங்க வேண்டும். எனவே, முதல்வர் அறிவித்த நிவாரண நிதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 தமிழக ஆளுநர் புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார். புதுவை ஆளுநரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். மத்திய அரசிடம் இடைக்கால நிவாரண நிதி பெற்றுத் தர வேண்டும். பாஜக அறிவித்த முழு அடைப்புப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அன்பழகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com