புதுச்சேரி

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

DIN

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு, புதுவை அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி.யும், புதுவை மாநில அதிமுக இணைச் செயலருமான மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
 உழைக்கும் வர்க்கமான மீனவர்களின் தொழிலும் பொருளாதார வருமானமும், சமூக அந்தஸ்தும் உயர உலக அரசுகள் நல்ல திட்டங்களை செயல்படுத்த தீர்மானம் கொள்ள வேண்டும்.
 கஜா புயலால் தமிழகம் மற்றும் புதுவையில் காரைக்கால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மன அழுத்தத்தை அளிக்கிறது.
 அவர்களுக்குரிய நிவாரணத்தையும் மறுவாழ்வுக்கான புனரமைப்புப் பணிகளையும் அரசுகள் விரைவாக செய்து முடிக்க வேண்டும்.
 ஒரு புயலில் இருந்து மீள்வதற்கு முன்பே அடுத்த கடல் சீற்றம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும்.
 புதுவையை பொறுத்தவரை 3-ஆவது பெரிய சமுதாயமாக இருக்கும் மீனவர்கள், புதுவையின் பொருளாதார வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும், வருமானத்துக்கும், வேலைவாய்ப்புக்கும், உணவு ஆதாரத்துக்கும், ஏற்றுமதிக்கும் மிகப் பெரிய பங்காற்றுகின்றனர்.
 ஆனால், அவர்கள் வாழ்க்கையில் இதுவரை ஒரு பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஒரு அடி முன்னேறினால் 4 அடிகள் அவர்கள் கீழே இழுக்கப்படுகின்றனர்.
 நீலப்புரட்சியை உருவாக்கியுள்ள இவர்கள் இன்னமும் தரை மேல் பிறந்து தண்ணீரிலும், கண்ணீரிலும் வாழும் நிலை மாறவில்லை.
 இதற்கு அரசுகள் பிரத்யேக திட்டங்களை மீன்பிடி தொழிலுக்கென்று செயல்படுத்தாததுதான் காரணம்.
 எனவே, அவர்கள் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள், துறைமுக வளர்ச்சி, மீன்பிடி உபகரணங்களை வாங்கித் தருதல், மீனவர்களுக்கான தொழில் பயிற்சி, கடன் உதவி, வீட்டு வசதி, தொழில்நுட்ப வசதிகளை பெருக்கித் தருதல், மீனவர் நல வாரியம் அமைத்தல், மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தை புதுப்பித்தல், அவர்களுக்கான கல்வி, வேலை, இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்துதல், மீன்வள கல்லூரி ஒன்றை புதுவையில் நிறுவுதல், நிலுவையில் உள்ள மீனவர் நிவாரணங்களை வழங்குதல், மீனவர்களுக்கென்று மத்தியில் ஒரு தனிஅமைச்சகம் மற்றும் மீனவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளை புதுவை அரசு உடனடியாக எடுத்து மீனவ மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT