சனிக்கிழமை 22 செப்டம்பர் 2018

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் தருவார்; புதுவை முதல்வர் நம்பிக்கை

By  புதுச்சேரி,| DIN | Published: 11th September 2018 09:23 AM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் தருவார் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
 இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
 புதுவையில் கடந்த மாதம் ரூ.70-ஆக இருந்த பெட்ரோல் விலை இந்த மாதம் ரூ.80-ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, டீசல் விலை ரூ.64-இல் இருந்து ரூ.74-ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு உருளைக்கு கொடுத்து வந்த மானியத்தையும் ரத்து செய்து விட்டனர்.
 இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு திங்கள்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
 மக்களும் தாமாக முன்வந்து ஆதரவு தெரிவித்ததால் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.
 இவர்கள் 27 ஆண்டுகாலம் சிறையில் இருந்துள்ளதால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் 7 பேரையும் விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை என பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டனர்.
 தண்டனை பெற்றவர்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். எனவே, தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்று, அவர்களை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பிப்பார் என நம்புகிறேன். அவர்களது விடுதலையில் எனக்கு தனிப்பட்ட கருத்து உள்ளது. ஆனாலும், ராகுல் காந்தியின் கருத்தை ஏற்பது எனது கடமை. விடுதலை செய்வது அவர்களது குடும்பத்துக்கும், எதிர்காலத்துக்கும் நல்லது என்றார் முதல்வர் நாராயணசாமி.

More from the section

7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு: குண்டு வெடிப்பில் உயிரிழந்தவரின் மகன் உண்ணாவிரதம்
காரைக்கால் என்.ஐ.டி.யில் கருத்தரங்கம் நிறைவு
உலக சுற்றுலா தினம் கொண்டாட முடிவு
தூய்மையே சேவை கையெழுத்து இயக்கம்
மருந்தாளுநர் தின சுவரொட்டி வெளியீடு