செவ்வாய்க்கிழமை 18 செப்டம்பர் 2018

மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரக் கோரி மறியல்

DIN | Published: 12th September 2018 06:55 AM

புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரக் கோரி, விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி  தேங்காய்திட்டு பகுதியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது.  இத்துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.  மீன்பிடி துறைமுக முகத்துவாரம் கடந்த சில மாதங்களாக ஆழப்படுத்தாத காரணத்தால் முகத்துவாரம் தூர் அடைந்துள்ளது. மேலும்,  முகத்துவாரம் தூர் வாராததால் மீன்பிடித்துவிட்டு மீண்டும் துறைமுகம் திரும்பும்போது 10-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன.   இந்த நிலையில், மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் நெடுஞ்சாலையான மரப்பாலம் சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முதலியார்பேட்டை போலீஸார்,  சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்தனர்.  
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முகத்துவாரம் தூர்வாரும் வரை விசைப்படகுகளை இயக்கமாட்டோம் எனவும்,  முகத்துவாரத்தை தூர்வார பல முறை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய மீனவர்கள், இத்தொழிலை நம்பியுள்ள 3,000 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளதாகவும்,  மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் தினமும் ரூ.ஒரு கோடி  வரை வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 

More from the section

புதுவை பல்கலை. மாணவர்கள் தர்னா
புதுச்சேரி கடல் விநாயகர் சிலைகள் கரைப்பு
காவலர் தேர்வு விவகாரம்: ஆளுநர் நிராகரித்த கோப்பு மத்திய உள்துறைக்கு அனுப்பப்படும்
விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்
ஆட்டோ கூடுதல் கட்டணம்:தகவல் அளிக்க குறைதீர் அட்டை