ஆட்டோ கூடுதல் கட்டணம்:தகவல் அளிக்க குறைதீர் அட்டை

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், புதுவையில் குறைதீர் அட்டையை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், புதுவையில் குறைதீர் அட்டையை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
 புதுவை போக்குவரத்துத் துறை ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்கி, கட்டணமும் நிர்ணயம் செய்துள்ளது.
 மேலும், புதிய கட்டணத்தை மீட்டரில் திருத்தில் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் நிர்ணயித்தபடி கட்டணம் வசூலிப்பதில்லை.
 மேலும், இணையதளம் மூலம் பதிவு செய்து வரவழைக்கும் கார்களில் பயணிக்கவும் அனுமதி அளிப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் ஆளுநருக்கு புகார் அனுப்பினர். இதுதொடர்பாக அதிகப்படியான புகார்கள் வந்ததை அடுத்து, ஆளுநர் கிரண் பேடி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவிக்க அட்டை ஒன்றையும் தயாரித்து வழங்க உத்தரவிட்டார்.
 அதன்படி, போக்குவரத்துத் துறை சார்பில் ஆட்டோ பயணிகள் குறை தெரிவிக்கும் அட்டை தயாரிக்கப்பட்டது.
 அதனை ஆளுநர் கிரண் பேடி வெளியிட, புதுவை போக்குவரத்து ஆணையர் எஸ்.சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.
 இந்த அட்டையின் பின்புறத்தில், ஆட்டோ பதிவு எண், சம்பவம் நடந்த நேரம், தேதி, புறப்படும் மற்றும் இறங்கும் இடம், பயணியின் பெயர், அவரது செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும்.
 அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்த விவரங்களை இந்த அட்டையில் குறிப்பிட்டு அஞ்சல் மூலம் போக்குவரத்துத் துறைக்கு அனுப்பலாம்.
 இதன் மூலம் போக்குவரத்துத் துறை சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
 இது குறித்து ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் பதிவிட்ட செய்தி:
 இந்த புகார் அட்டை ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு பயணம் செய்வதற்கு முன் இலவசமாக வழங்கப்படும். இதை போக்குவரத்துத் துறை, போக்குவரத்து போலீஸாரின் ஆதரவுடன் செயல்படுத்தும். பயணிகள் அளிக்கும் அனைத்து புகார்களின் மீது போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும், மீண்டும் யார் மீது புகார் வருகிறது என்பதை அறிய தரவு வங்கி தயாரிக்க வேண்டும்.
 மூன்று முறை தவறு செய்யும் ஓட்டுநர்களின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com