விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

புதுவையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று மாநில விவசாய கூலித் தொழிலாளர் நல வாரிய அமைப்பு நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுவையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று மாநில விவசாய கூலித் தொழிலாளர் நல வாரிய அமைப்பு நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து, சங்கத்தின் பொதுச் செயலாளர் வீரமுத்து செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
 புதுவை அரசு கட்டடத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து பல சலுகைகளை வழங்குகிறது. அவர்கள் ஒரு நாள் ஊதியமாக ரூ.700 பெறுகின்றனர்.
 அதேபோல, மீனவர்கள் படகு வாங்கி தொழில் செய்ய மானியம் வழங்கி வருகிறது. நெசவுத் தொழிலாளர்களுக்கு நூல் மற்றும் உபகரணங்களை வழங்குகிறது. விவசாயத் துறை மூலம் உரம், டிராக்டர் வாங்க, பம்பு செட் அமைக்க பல லட்சங்களை விவசாயிகளுக்கு அளிக்கிறது. ஆனால், காலை 5 மணிக்கே விவசாயத் தொழிலில் ஈடுபடும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு
 எந்தவித சலுகையும் இல்லை. எனவே, புதுவை அரசு உடனடியாக விவசாய கூலித் தொழிலாளர் நல வாரியம் அமைத்து முதியோருக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம், மீனவர்களுக்கு 45 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்தில் உதவித்தொகையும் வழங்குவது போல, விவசாய தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையும் வழங்க வேண்டும்.
 அனைத்துப் பணிகளுக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டதால் அடித்தட்டு மக்கள் வறுமையில் வாடுகின்றனர். பிகார், குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலையின்றி தமிழகம், புதுச்சேரிக்கு வந்து வேலை செய்கின்றனர்.
 ஆனால், புதுவை மக்கள் எங்கும் சென்று வேலை செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, உடனடியாக நல வாரியம் அமைத்து அடித்தட்டு மக்கள் வாழ உதவி செய்ய வேண்டும் என்றார் வீரமுத்து.
 பேட்டியின்போது சங்கத் தலைவர் தேவராசு, செய்தித் தொடர்பாளர் இரிசப்பன், ஆலோசகர் மாயக்கிருஷ்ணன், விவசாய அணித் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com