புதிய ஆராய்ச்சிகளின் மூலமே நாட்டின் வளர்ச்சி தீர்மானிக்கப்படும்: புதுவை பல்கலை. துணைவேந்தர்

புதிய ஆராய்ச்சிகளின் மூலம்தான் நாட்டின் வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என்று புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் பேசினார்.

புதிய ஆராய்ச்சிகளின் மூலம்தான் நாட்டின் வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என்று புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் பேசினார்.
 புதுவை பல்கலைக்கழகம், புதுதில்லி இந்திய பல்கலைக்கழகங்கள் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும், "சமூக அறிவியலில் நவீன ஆராய்ச்சி முறைகள்' என்ற தலைப்பிலான பயிலரங்கம் பல்கலை. வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
 ஏழு நாள்கள் நடைபெறும் இந்தப் பயிலரங்கத்தை தொடக்கிவைத்து துணைவேந்தர் குர்மீத் சிங் பேசியதாவது: தற்போதைய சூழலில் மிகப் பெரும் மாற்றத்தை நோக்கி உலக பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் கல்வியில் ஏற்பட்டுள்ள உலகளாவிய பார்வை காரணமாக தற்போதைய கல்விமுறையில் மிகப் பெரும் முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
 தற்போதைய உயர் கல்வி என்பது தேசியக் கல்வியிலிருந்து மாறி உலகளாவிய கல்வியாகவும், மாணவர்கள் ஒரு முறை படித்தால் போதும் என்ற நிலை மாறி, வாழ்க்கை முழுவதுமே அனைவராலும் கல்வியை கற்க முடியும் என்ற நிலையிலும், ஆசிரியர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கல்வி தற்போது கற்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது. அதோடு, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி என்பது அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவர்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆராய்ச்சிகள் மூலமே பல்கலைக்கழகங்கள் மிகச் சிறந்த உன்னத நிலையை அடைகின்றன. நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நேர்மை, வெளிப்படைத்தன்மை, பெருந்தன்மை உள்ளிட்ட தனி மனிதப் பண்புகளை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் குர்மீத்சிங்.
 கேரள பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திர நாயர் தொடக்கவுரை ஆற்றினார். முன்னதாக பேராசிரியர் அரிகரன் வரவேற்றார். விழாவில், இந்திய பல்கலைக்கழகங்கள் நிறுவனத்தின் பல்கலைக்கழக செய்தி ஆசிரியர் ராமதேவிபனி, ஆய்வுத்துறை உதவி இயக்குநர் உஷா ராய் நேகி, அண்ணாமலைப் பல்கலை. வணிகவியல் துறைத் தலைவர் இளங்கோவன், அம்பேத்கர் பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் லஜிபதி ராய் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
 சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய பல்கலைக்கழகங்கள் நிறுவனத்தின் தலைவர் சந்தீப் சன்செட்டி பேசுகையில், ஆய்வுத் துறை மாணவர்களுக்கு அறம் சார்ந்த சிந்தனைகளில் நம்பிக்கையும், நெறிமுறைகளில் தெளிவும் இருக்க வேண்டும். அப்போதுதான் புதிய சிந்தனைகளும், அதிலிருந்து புதிய ஆராய்ச்சிகளும் வெளிப்படும். ஆராய்ச்சிகளில் கண்டறியப்படும் உண்மைகள் செயல்பாட்டுக்கு வரவும், அவற்றைப் பயன்படுத்தி தனிமனிதர்களும், தேசமும் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான சூழலை உருவாக்குவதும் ஆராய்ச்சியாளர்களின் அடிப்படைக் கடமை என்றார். மேலாண்மைத் துறை பேராசிரியர் சாருமதி நன்றி கூறினார்.
 பயிலரங்கில் மாணவர்களும், பேராசிரியர்களும் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com