தமிழ்ப் படைப்பாளிகளுக்கு "கலைமாமணி' விருது எப்போது வழங்கப்படும்?

புதுவை தமிழ்ப் படைப்பாளிகளுக்கு "கலைமாமணி' விருது எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி தமிழ் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

புதுவை தமிழ்ப் படைப்பாளிகளுக்கு "கலைமாமணி' விருது எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி தமிழ் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
 புதுவையில் கலைபண்பாட்டுத் துறை சார்பில் தமிழ்ப்பணி செய்பவர்களுக்கு தமிழ்மாமணி விருதும், இயல் துறை, இசைத் துறை, நாடகத் துறை, சித்திரத் துறை, நாட்டியத் துறை, நாட்டுபுறக் கலை ஆகியவற்றில் சேவை செய்பவர்களுக்கு கலைமாமணி விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
 தமிழ்மாமணி விருதுக்கு ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பணம், சான்றிதழ் வழங்கப்படும். கலைமாமணி விருது பெறுபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம், சான்றிதழ் வழங்கப்படும்.
 ரங்கசாமி ஆட்சியின் போது, தமிழ்மாமணி விருது பெறுபவர்களுக்கு ஒரு பவுன் தங்கப் பதக்கம், சான்றிதழும், கலைமாமணி விருது பெறுபவர்களுக்கு அரை சவரன் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.
 நாளடைவில் தங்கத்தின் விலையேற்றம் காரணமாக இந்த முறை மாற்றப்பட்டது. இதனிடையே, இந்த விருதுகளைப் பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் கெளரவத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
 இந்த விருதுகள் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதை வழங்கக் கோரி தமிழ்மாமணி - கலைமாமணி சங்கத்தினர் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விருது வழங்காததற்கு நிதிப் பற்றாக்குறையே காரணம் என கலைப்பண்பாட்டுத் துறை தெரிவித்தது.
 இந்த நிலையில், தமிழ்மாமணி - கலைமாமணி விருதுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 இதையடுத்து, அவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 மனுவைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் உடனே கலைப்பண்பாட்டுத் துறை இயக்குநர் கணேசனை அழைத்து, விருதுகள் வழங்காததற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு இயக்குநர் கணேசன் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டினாராம்.
 உடனே அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலளிக்குமாறு இயக்குநருக்கு ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
 இந்த நிலையில், கடந்த வாரம் இயக்குநர் கணேசன் எழுத்துப்பூர்வ பதிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அளித்தார்.
 அதில், நிதி இல்லாததால் விருதுக்கு விண்ணப்பித்த 26 பேருக்கு விருதுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
 இதையடுத்து, செவ்வாய்க்கிழமை புதுவை தமிழ்மாமணி, கலைமாமணி சங்கத் தலைவர் ஏ.மு ராஜன், செயலர் ஆனந்த், பொருளாளர் ராமஜெயம் உள்ளிட்ட 5 பேர் ஆளுநரை சந்தித்தனர்.
 அப்போது, ஆளுநர் கிரண் பேடி அரசிடம் நிதி இல்லாததால் விருதுகளை வழங்கவில்லை. எனவே, பணமுடிப்பு இல்லாமல் சால்வை மற்றும் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் விருதுகளை வழங்க தான் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தாராம்.
 இதையடுத்து அவர்கள், நாங்கள் 5 பேர் மட்டும் முடிவெடுக்க முடியாது அனைவரையும் கலந்தாலோசித்த பின்னர்தான் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறினராம்.
 வயதான நிலையில், வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு விருதுடன் வழங்கப்படும் பணமுடிப்பு சிறு உதவியாக இருக்கும் என்பதே நிதர்சனம். அவ்வாறிருக்கையில், வெறும் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்பது அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
 இதுகுறித்து சங்கத் தலைவர் ஏ.மு.ராஜன் கூறியதாதவது: புதுவையில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் வழங்கப்படவில்லை. இதற்காக விண்ணபித்துள்ள பலர் ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள். இந்த ரொக்கப்பணம் என்பது அவர்களுக்கான சிறு கெளரவம்தான்.
 ஏழ்மையிலும் தமிழ்ப்பணி, கலைப்பணிக்காகப் பாடுபடும் அறிஞர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகைதான் இது. ஆனால், ஆளுநர் இதைக் கொச்சைப்படுத்தும் வகையில் சால்வை, சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் எனக் கூறுவது வருத்தமளிக்கிறது.
 அரசு ஆண்டுதோறும் விழா எடுத்து, விருதுகளை வழங்கினால் நிதி பிரச்னையே இருக்காது. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நடத்துவதால்தான் விருது பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, நிதி வழங்குவதும் அதிகமாகிறது. எனவே, அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com