சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கு அக். 17-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுவை பள்ளி கல்வித் துறை துணை இயக்குநர் (தொடக்கக் கல்வி) மைக்கேல் பென்னோ அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
புதுவை பள்ளிக் கல்வி இயக்ககம், ஜவகர் சிறுவர் இல்லம் மூலம் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளி குழந்தை விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கான மாநில அளவிலான போட்டிகள் கீழ்க்கண்ட நெறிமுறைகளுக்கு இணங்க நடத்தப்பட உள்ளன.
மாநிலத்தின் சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். புதுச்சேரி - 10 (நகரம் - 5, கிராமம் - 5), காரைக்கால் - 2, மாஹே - 1, ஏனாம் - 1, எஸ்சி - 1, மாற்றுத் திறனாளி - 1 என மொத்தம் 16 பேருக்கு இந்த விருது வழங்கப்படும். 9 முதல் 16 வயது வரை உள்ள புதுவை மாநிலத்தில் பயிலும் பள்ளி குழந்தைகள் போட்டியில் கலந்து கொள்ளலாம். படைப்பாற்றல் நிகழ்கலை (நடனம், வாய்ப்பாட்டு, இசைக் கருவி மீட்டல்), படைப்பாற்றல் கலை (ஓவியம், சிற்பம், கைவினை), படைப்பாற்றல் எழுத்து (கதை, கவிதை, கட்டுரை, உரைவீச்சு, கையெழுத்து), அறிவியல் (வினாடி- வினா, கட்டுரை, மாதிரிச் செய்தல், கலந்துரையாடல் விளக்கவுரை) ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கின்றன.
இந்தப் போட்டிகள் மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் என இரு நிலைகளில் நடைபெறும். மண்டல அளவிலான போட்டியில் பங்கு பெறும் பள்ளிகள் மற்றும் ஜவகர் சிறுவர் இல்லங்கள் ஒவ்வொன்றும் 10 குழந்தைகள் வரை (நிகழ்கலை - 5, கலை - 3, எழுத்து - 1, அறிவியல் - 1) அனுப்பலாம்.
படைப்பாற்றல் நிகழ்கலை, படைப்பாற்றல் கலை, படைப்பாற்றல் எழுத்து மற்றும் அறிவியல் பிரிவுகளில் போட்டியிடும் குழந்தைகள் அதிலுள்ள உள்பிரிவுகள் அனைத்திலும் பங்குபெற வேண்டும். ஒரு குழந்தையை ஒரு விருதுக்கான களத்துக்கு மட்டுமே தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
புதுச்சேரியில் கொம்யூன் வாரியாக கீழ்க்கண்ட இடங்களில் அக். 23-ஆம் தேதி மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.
அதன்படி, பாகூர், அரியாங்குப்பம் கொம்யூன்களுக்கு அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, வில்லியனூர் ஆகிய கொம்யூன்களுக்கு வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியிலும், உழவர் நகராட்சிக்கு தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், புதுச்சேரி நகராட்சிக்கு சவரிராயலு நாயகர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடக்கின்றன.
மண்டல அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகள் புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் வருகிற அக். 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற வேண்டும்.
இதற்கான விண்ணப்பித்தை நிறைவு செய்து பள்ளி முதல்வர் / தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் அக். 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0413 - 2225751 என்ற ஜவகர் சிறுவர் இல்ல தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com