பெண் கொலை வழக்கில் போமி சாமியார் கைது

புதுச்சேரியில் பெண் கொலை வழக்கில் போலி சாமியாரை போலீஸார் சனிக்கிழமை கைது


புதுச்சேரியில் பெண் கொலை வழக்கில் போலி சாமியாரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுவை மாநிலம், கரிக்கலாம்பாக்கம் நேரு நகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி அசோக்கின் மனைவி சிந்துஜா (எ) கிருஷ்ணவேணி (25). இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி கரிக்கலாம்பாக்கம் செங்கன் ஓடை தெப்பக்குளம் காளி கோயில் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தன. எனவே, கிருஷ்ணவேணி நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கொலையாளியைப் பிடிக்க காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் உத்தரவின் பேரில், அதிரடிப்படை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், வில்லியனூர் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அசோக்கின் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பரான போலி சாமியார் கோவிந்தராசு (45), கிருஷ்ணவேணியைக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த தனிப் படையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிருஷ்ணவேணியைக் கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதை அவர் ஒப்புக் கொண்டார்.
இதுதொடர்பாக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அசோக்கின் எதிர் வீட்டில் வசித்து வந்த கோவிந்தராசு அவரது குடும்பத்தில் தோஷம் உள்ளதாகவும், அதைக் கழித்தால்தான் குடும்பம் செழிக்கும் எனக் கூறியும் அவ்வப்போது பூஜைகள் நடத்தி, பணம் பறித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் கிருஷ்ணவேணியிடம் பணம் இல்லை என்பதை அறிந்த கோவிந்தராசு அவரிடம் உள்ள நகைகளைப் பறிக்கத் திட்டம் தீட்டி, அவரைத் தனியாக பூஜைக்கு வர வேண்டும் என்று கூறினார். இல்லையென்றால், குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து என அச்சுறுத்தினார்.
இதனால், பயந்துபோன கிருஷ்ணவேணி தனியாக நகைகளுடன் காளி கோயிலுக்குச் சென்றார்.
கோயிலில் சுவாமி கும்பிட்ட கிருஷ்ணவேணியை அருகே இருந்த புளியமரத்தடிக்கு அழைத்து சென்று கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளைக் கொள்ளயடித்துச் சென்றார் என்றார் முதுநிலை எஸ்.பி.இதையடுத்து, கோவிந்தராசுவிடமிருந்து 13 பவுன் தங்க நகைகள், ஒரு மோட்டார் சைக்கிள், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com