வெள்ளிக்கிழமை 19 அக்டோபர் 2018

தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் புதுவையில் தொடக்கம்

DIN | Published: 24th September 2018 09:33 AM

தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை புதுவையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
விழாவில் ஆளுநர் கிரண் பேடி, இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கிப் பேசியதாவது:
ஆயுஷ் மான் பாரத் என்ற பெயரில் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். 
இந்தத் திட்டத்தின் கீழ் சமூகப் பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பின் ஏழைகள்,  நகர்ப்புறங்களில் வாழும் தொழிலாளர்கள் உள்பட நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 8.03 கோடி குடும்பத்தினரும், நகர்ப் பகுதிகளில் வாழும் 2.33 கோடி குடும்பத்தினரும் பயன் பெற இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 50 கோடி பேர் பயனடைவர்.
புதுவை மாநிலத்தைப் பொருத்தவரை ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினர் பயனடைவர். இந்தத் திட்டம் சுகாதாரத் துறை மூலம் செயல்படுத்தப்படும்.  அரசு மருத்துவமனைகள்,  தனியார் மருத்துவமனைகள்,  மருத்துவக் கல்லூரிகள் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். 
பயனாளிகள் புதுவையிலும்,  பிற மாநிலங்களிலும் அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளில் தங்களது விருப்பத்தின்படி மருத்துவச் சிகிச்சைப் பெற முடியும்.
 மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற முகமை மூலம் ஆதார் அட்டை,  பயோமெட்ரிக் பதிவு அடிப்படையில் பயனாளிகளுக்கு வெள்ளி  அட்டை,  தங்க அட்டை வழங்கப்படும். ஆதார் அட்டை  இல்லாத நேரத்தில் அரசு வழங்கிய பிற அட்டைகளைப் பயன்படுத்தி சிகிச்சைப் பெற முடியும். மேலும், 14555 என்ற இலவச தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறலாம். 
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் புதுவை அரசின் தலைமைச் செயலர் அஸ்வனி குமார், சுகாதாரத் துறைச் செயலர் கந்தவேலு, சுகாதாரத் துறை இயக்குநர் கே.வி.ராமன், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.மோகன்குமார்,  தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாநில அதிகாரி செயவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

More from the section

புதுவையில் ஆய்வுக்குச் சென்ற ஆளுநரை கல்லூரிக்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு
ஓசோன் துளைகள் குறித்த விழிப்புணர்வு நூல் வெளியீடு
காங்கிரஸ் சட்டப் பிரிவுத் தலைவர் நியமனம்
பல்கலை. ஆணழகன் போட்டி: மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர் சாம்பியன்
அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்