காவலர் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தும் முடிவை ஆளுநர் ஏற்க வேண்டும்: முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

புதுவையில் காவலர் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தும் அரசின் முடிவை புதுவை ஆளுநர் கிரண் பேடி ஏற்க வேண்டும் என முன்னாள் எம்.பி.  மு.ராமதாஸ் வலியுறுத்தினார்.

புதுவையில் காவலர் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தும் அரசின் முடிவை புதுவை ஆளுநர் கிரண் பேடி ஏற்க வேண்டும் என முன்னாள் எம்.பி.  மு.ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதுவை காவல் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள காவலர்களின் வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற அமைச்சரவையின் வேண்டுகோளை ஆளுநர் கிரண் பேடி  நிராகரித்திருப்பது துரதிருஷ்டவசமானது.  
இந்த பிரச்னையில் ஆளுநர் பொது நோக்கத்துடன் ஆராய்ந்து இருந்தால் வேலையில்லாமல் உள்ள இளைஞர்களின் கவலையை அறியலாம். 
மாறாக ஒரு தத்துவ முறையை மேற்கொண்டு நிரந்தரக் கொள்கையை மாற்ற முடியாது என்ற நிலையை எடுத்துள்ளார். பல வேற்றுமைகள் கொண்ட இந்தியாவில் எந்த ஒரு கொள்கையும், சட்டமும் நிரந்தமாக இருக்க முடியாது. ஒரு நல்ல நிர்வாகி மாற்றங்களுக்கு மதிப்பு அளிப்பவராக இருக்க வேண்டும்.
காவலர்களுக்கான நிலையான வயது வரம்பு எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை என்று கூறப்படுகிறது. 
அது ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் வேலையின்மை,  நிதிநிலை ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. புதுவையிலும்கூட இந்த நியமன விதிகள் ஒரே மாதிரியாக எல்லா காலத்திலும் இருந்தது இல்லை. 
5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வயது வரம்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது.
தற்போது வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் தவறுதலால் ஏற்பட்டதுதான். 
காவலர் பணியிடங்களில் காலியாகும் போதெல்லாம் உடனுக்குடன் நியமனம் செய்திருந்தால் அந்த வயதுக்கு உரியவர்கள் அப்போதே நியமனம் செய்யப்பட்டு இருப்பர்.
அரசின் தவறுக்காக வேலையில்லாத இளைஞர்கள் தண்டிக்கப்படக் கூடாது. வயது வரம்பைத் தளத்துவது என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதில் இருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.
இந்த பிரச்னை உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டால் அது அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.
எனவேதான் புதுவை காவல் துறை இயக்குநர், தலைமைச் செயலர் ஆகியோர் அமைச்சரவையின் முடிவை ஏற்று கோப்பை ஆளுநருக்கு அனுப்பி உள்ளனர். அமைச்சரவையின் முடிவை நிராகரித்து ஆளுநர் புதுவையின் ஜனநாயக அமைப்பைச் சீர்குலைக்கக் கூடாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com