புதுச்சேரி

காவல் அதிகாரி, ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்பட 5 பேருக்கு சிறை

DIN

காப்பீடு பெறுவதற்கான வாகனத்தை மாற்றிய வழக்கில்   காவல் உதவி ஆய்வாளர், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆணையர், ஓய்வு பெற்ற ஆய்வாளர்  உள்பட 5 பேருக்கு  சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது.
 புதுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் வீரராகவன்.  ஓய்வு பெற்ற போக்குவரத்து துணை
ஆணையர். 
இவரது மகன் கருணாகரனும்,  அவரது நண்பர் முத்துக்குமாரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கம்பிகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.  
இந்தச் சம்பவம் 2004-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.  இதில் முத்துக்குமாருக்கு கண் பார்வை பறிபோனது.
 இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  பார்வை பறிபோன முத்துக்குமாருக்கு அப்போது 30 வயதே இருந்ததால் இந்த விபத்துக்காக அதிகபட்சமாக ரூ.62 லட்சம் இழப்பீடாக காப்பீடு நிறுவனத்தில் கேட்கப்பட்டது. 
இதில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரில் சிபிஐ போலீஸார் புதுச்சேரி வந்து விசாரணை நடத்தினர்.
 அப்போது விபத்துக்குக் காரணமான கருணாகரன் மோட்டார் சைக்கிளுக்கு காப்பீடு இல்லாததால்,  ஆதாயம் பெறுவதற்காக அவரது நண்பர் மோட்டார் சைக்கிள் நம்பரை மாற்றிக் கொடுத்து வழக்குப் பதிவு செய்து இருப்பது தெரிய வந்தது.  
இதற்கு அப்போதைய போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி,  தலைமைக் காவலர் கலியபெருமாள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்ததாக முத்துக்குமார், கருணாகரன்,  வீரராகவன்,  கலியபெருமாள்,  சுந்தரமூர்த்தி ஆகியோர் மீது சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  
இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிகட்ட விசாரணை தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 வழக்கை விசாரித்த நீதிபதி தனபால்,  குற்றஞ்சாட்டப்பட்ட கலியபெருமாள்,  சுந்தரமூர்த்தி  ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும்,  மற்ற மூவருக்கும் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.  
 இதில் சுந்தரமூர்த்தி தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.  கலியபெருமாள் உதவி ஆய்வாளராக பணியில் இருந்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT