ஆளுநர் கிரண் பேடியை நீக்கி, அரசை முடக்க அதிமுக கோரிக்கை

ஆளுநர் கிரண் பேடியை பதவியில் இருந்து நீக்குவதுடன், புதுவை அரசையும்  எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வரை  முடக்கி வைக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆளுநர் கிரண் பேடியை பதவியில் இருந்து நீக்குவதுடன், புதுவை அரசையும்  எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வரை  முடக்கி வைக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு,  புதுவை  அதிமுக பேரவைக்குழுத் தலைவர் ஆ.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன்,  ஆ.பாஸ்கர், அசனா ஆகியோர் திங்கள்கிழமை அனுப்பிய மனு விவரம்:   புதுவை துணை நிலை  ஆளுநருக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் தற்போது நிலவி வரும் அதிகார மோதலால் புதுவையில்  ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்த போராட்டம் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து அரசியல் ரீதியாக நடத்தப்படும் போராட்டம். அதேநேரம் கிரண் பேடியின் அணுகு முறையையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.
 ஏனென்றால், துணை நிலை ஆளுநர் செயல்படும் விதம் சர்வாதிகாரப் போக்காகவும்,  ஜனநாயகத்துக்கு விரோதமாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாகவும் இருக்கிறது.  அவர் ஜனநாயக நெறிமுறைகளை முற்றிலும் உதாசீனம்  செய்கிறார்.
கிரண்பேடி தொடர்ந்து புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பணியாற்றினால் மத்திய அரசின் நற்பெயரையும் மேலும் கெடுத்து விடுவார்.  ஆகவே,  உடனடியாக புதுவையில் இருந்து கிரண்பேடியை நீக்கிவிட்டு ஒரு புதிய துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும்.
துணை நிலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன்  முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி சட்டப்பேரவை  உறுப்பினர்கள், தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி மாநிலத்தில் ஆட்சி செய்யும் அரசே ஆளுநர் மாளிகை முன் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.  எனவே, இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனே தலையிட  வேண்டும். அரசியல் உள்நோக்கத்துடன் ஆளும் அரசு செயல்படுவதால் மக்களவைத் தேர்தல் முடியும் வரை புதுவை காங்கிரஸ் அரசை முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com