திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என புதுவைத் தமிழ்ச் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என புதுவைத் தமிழ்ச் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 

புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா தமிழ் மாநாடு புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் கடந்த 16, 17 ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டு நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் வி. முத்து தலைமை வகித்தார். 

இதில் மாநாட்டை முன்னிட்டு, நான்காயிரம் பேர் திருவள்ளுவர் வேடமணிந்து அவரது உருவத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்திய உலக சாதனை முயற்சி நிகழ்வுக்காக அசிஸ்ட் உலக சாதனை நிறுவனம், ரெக்கார்டு ரைசர் நிறுவனம், புதுவை புத்தக சாதனை நிறுவனம் வழங்கிய சான்றிதழ்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஆர். முத்தரசன் ஆகியோர் சங்கத் தலைவர் வி. முத்துவிடம் வழங்கினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருக்குறளை இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். இதனை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,  மத்திய அரசு, தமிழர்களின் பழம்பெரும் தொன்மையை வெளிப்படுத்தும் கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு, அதன் உண்மைத் தன்மையை வெளியிட வேண்டும்,

புதுச்சேரி அரசால் கடந்த 1965 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதுச்சேரி ஆட்சிமொழிச் சட்டத்தை உறுதியாகவும், உடனடியாகவும் நிறைவேற்ற வேண்டும், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.  புதுவையில் தமிழ் வளர்ச்சித் துறையை அமைக்க வேண்டும்,

கடந்தாண்டுகளில் அறிவிக்கப்பட்டு, வழங்கப்படாமல் உள்ள தமிழ் மாமணி விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும். அறிவிக்கப்படாமல் உள்ள கலைமாமணி விருதுகளை அறிவிக்க ஆவன செய்ய வேண்டும்.

புதுச்சேரி லாசுப்பேட்டை தொல்காப்பியர் சாலையை அரசிதழில் வெளியிட்டு, அந்த சாலையில் தொல்காப்பியர் சிலையை நிறுவ வேண்டும். 

மறைந்த கவிஞர் தமிழ்ஒளிக்கு கருவடிக்குப்பம் பகுதியில் சிலை அமைக்க வேண்டும். முக்கிய சாலை ஒன்றுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

புதுச்சேரிக்கு பெருமை சேர்த்து அண்மையில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழறிஞர் இரா. திருமுருகன், இரு முறை சாகித்ய அகாதெமி விருதுபெற்ற தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா, புதுவை மற்றும் தமிழக அரசின் விருது பெற்றுள்ள புலவரேறு அரமதி தென்னகனார் ஆகியோரின் தமிழ்ப் பணியைப் பெருமைப்படுத்தும் வண்ணம் இவர்களின் பெயர்களைச் சாலைகளுக்கும், பள்ளிகளுக்கும் சூட்ட வேண்டும். 

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளதமிழ் இருக்கையை உருவாக்க வேண்டும். பிற பாடப்பிரிவுகளில் தமிழ்மொழிப் பாடமும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் ஆகிய 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தில்லி தமிழ்ச் சங்க செயலர் இரா. முகுந்தன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தி. சபாபதி மோகன், புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலர் மு. பாலசுப்பிரமணியன், பொருளர் சீனு. மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com