புதுச்சேரி

பேரவையை முடக்குவோம்: பாஜக எச்சரிக்கை

DIN

புதுவை முதல்வர் போராட்டத்தை கைவிடாவிடில் சட்டப்பேரவையை முடக்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மக்களவைத்  தேர்தல் கூட்டணியில் புதுவை தொகுதி பாஜகவுக்கு  ஒதுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, பொதுச் செயலாளர் ராம்லால், புதுவை மேலிட பொறுப்பாளர் கோயல் ஆகியோரை சந்தித்து தெரிவிக்கவுள்ளோம்.
2004 மக்களவைத்  தேர்தலில் பாஜக ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை பெற்று, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே வரும் மக்களவைத் தேர்தலில் அமையவுள்ள மெகா கூட்டணியில் பாஜக  வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி தனது கட்சி புதுவையில் போட்டியிட விரும்புவதும், அதிமுக விருப்ப மனு அளித்திருப்பதும் அந்தத்த கட்சிகளின் நிலைப்பாடு. புதுவையில் பாஜகவின் வாக்கு 2.8 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிர்வாகிகளே 8 ஆயிரம் பேர் பூத் மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பாஜக வெற்றி பெற்றால் புதுவைக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும், புதுவை  வளர்ச்சி  பெறும் என்று மக்கள் விரும்புகின்றனர். கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டதால், இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு  என்.ரங்கசாமி  விட்டு கொடுக்க வேண்டும்.  
புதுவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் நேற்று முதல்வரே தனது இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றியதுடன், பல இடங்களிலும் ஏற்றச் செய்திருந்தார். இதனால் நாங்கள் ஏற்றவில்லை. அண்ணா  தோற்றுவித்த திமுகவுக்கு, தொடர்ந்து எதிர்மறை கருத்துகளை கூறி மு.க. ஸ்டாலின் முடிவுரை எழுதி வருகிறார். 
முதல்வரின் தர்னா போராட்டம் ஒரு நாடகமே. மக்களிடம் செல்வாக்கு இழந்துள்ளதால் போராட்டத்தை முதல்வர் நாராயணசாமி நடத்தி வருகிறார். தேசியத் தலைவர்களை அழைத்து ஆதரவு தரக் கூறுகிறார். முதல்வர் தனது போராட்டத்தை கைவிடாவிடில் புதுவை பேரவையை முடக்க  அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். 
போராட்டத்தின் மூலம் மக்களவைத்  தேர்தலில் அனுதாபம் தேட முயற்சிக்கின்றார் என்றார் சாமிநாதன். கட்சியின் மாநில துணைத்  தலைவர்கள் செல்வம், ஏம்பலம் செல்வம், பொது செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க விக்ரமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT