போராட்டம் மூலம் முதல்வர் சாதித்தது என்ன?

புதுவை ஆளுநருக்கு எதிராக நடத்திய போராட்டம் மூலம் முதல்வர் வே.நாராயணசாமி சாதித்தது என்ன என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுவை ஆளுநருக்கு எதிராக நடத்திய போராட்டம் மூலம் முதல்வர் வே.நாராயணசாமி சாதித்தது என்ன என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து இந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன்  செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் தேர்தல் அறிவிப்புகள், சட்டப்பேரவை  வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.  ஏற்கெனவே செயல்பட்டு வந்த திட்டங்களும் முடங்கின.  இதனால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
அதேநேரத்தில் இந்த அரசு செயல்படாததற்கு துணை நிலை ஆளுநர்தான் காரணம் எனக்கூறி ஆட்சியாளர்கள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.  இந்த நிலையில், கடந்த பிப்.13-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி, திட்டங்களை தடுக்கும் துணை நிலை ஆளுநரை கண்டித்தும்,  39 கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக ஒப்புதல் தர கூறியும் ஆளுநர் மாளிகை முன் தொடர் தர்னா போராட்டத்தைத் தொடங்கினார். 
இந்த நிலையில், திங்கள்கிழமை ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். உண்மையில் இந்த போராட்டம் மூலம் முதல்வர் சாதித்தது என்ன என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.  ஏனென்றால், கூட்ட முடிவுக்குப் பிறகு முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் கிரண் பேடி எங்களது கோரிக்கைகளை ஏற்று, அவரது முடிவுகளை மறு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார் என்றுதான் தெரிவித்தார். ஆனால் ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற ஒப்புக் கொண்டதாக முதல்வர் கூறவில்லை. காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும், தன்னை கட்சியில் முதன்மையானவனாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே முதல்வர் நாராயணசாமி செயல்படுகிறார். இதை மாற்றி தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற யதார்த்த நிலைக்கு வந்து புதுவையின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com