சமுதாய வளர்ச்சிக்கு மாணவிகளின் பங்களிப்பு அவசியம்: முதல்வர் வே. நாராயணசாமி

சமுதாய வளர்ச்சிக்கு மாணவிகளின் பங்களிப்பு அவசியம் என்றார் புதுவை முதல்வர் வே. நாராயணசாமி.

சமுதாய வளர்ச்சிக்கு மாணவிகளின் பங்களிப்பு அவசியம் என்றார் புதுவை முதல்வர் வே. நாராயணசாமி.
புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 9 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுவை முதல்வர் வே. நாராயணசாமி 2012-15 மற்றும் 2013-16 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற 1,622 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து, ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பிடித்த 32 மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி அவர் பேசியதாவது:
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே புதுவை மாநிலம் முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக பெயர் பெற்றது. அதுமட்டுமன்றி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆய்வில், உயர் கல்வியில் புதுவை மாநிலம் தேசிய அளவில் 5 ஆவது இடம்பிடித்தது. இதில் சிறந்த கல்லூரிகளாக புதுச்சேரி பொறியியல் கல்லூரி, தாகூர் அரசு கல்லூரி, கதிர்காமம் அரசு கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, எனது தலைமையில் பொறியியல் கல்லூரியில் நடத்திய மெகா வேலைவாய்ப்பு முகாமில் 8,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 1,850 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தும், 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவும் உலகில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் தற்போது இந்தியாவும், சீனாவும்தான் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதற்கு அதிகளவில் இளம் மனிதவளத்தை நாம் பெற்றிருப்பதே காரணம்.
பெற்றோர்களின் ஒத்துழைப்பின்றி நாம் எதையும் செய்ய இயலாது. உங்களது பெற்றோர்களை மறந்துவிடாதீர்கள். திருமணமாகி சென்றாலும் கூட பெற்றோர்களை காப்பாற்றுங்கள். பேராசிரியர்களுடன் தொடர்பில் இருங்கள்.
நமது நாட்டில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதனை நாம் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் உயரும் போது, சமுதாய வளர்ச்சிக்கும் உங்களின் பங்கு இருக்க வேண்டும். புதுவை மாநில வளர்ச்சிக்கும் உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்றார் அவர்.
இதில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆர்.டி. சபாபதி மோகன் பேசுகையில், பட்டம் பெற்றுள்ள நீங்கள் வாழ்க்கையில் சவால்களையும், வாய்ப்புகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஒவ்வொரு சவால்களும் வாய்ப்புகளே; அதே போல, ஒவ்வொரு வாய்ப்புகளும் சவால்களே. சவால்களை வாய்ப்புகளாக மாற்ற உங்களது திறமையை பயன்படுத்துங்கள். அறிவின் துணை கொண்டு, உங்களது மொழித் திறன், ஆளுமைத்திறன், கணினித் திறன் உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் உயர்நிலையை நீங்கள் அடையலாம். 21 ஆம் நூற்றாண்டு இணையற்ற வளம் இந்திய பெண்களே என்பதை மறவாதீர் என்றார் அவர்.
முன்னதாக, அனைவரையும் வரவேற்ற கல்லூரி முதல்வர் ப. பூங்காவனம் பட்டமளிப்பு விழாவை தொடக்கி வைத்தார். விழாவில் கல்வித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், உயர் கல்வித் துறை இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி, கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்கள், மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com