புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.
புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.
 யூனியன் பிரதேசமான புதுவையில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்தார்.
 புதுவை எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருவதாலும், இப்போது ஆளும் கட்சியாக இருப்பதாலும் பேச்சுவார்த்தையில் எவ்வித இழுபறியும் இன்றி, திமுக கூட்டணியில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
 அதிமுக கூட்டணியில் அந்தத் தொகுதி புதுவையில் வலுவான எதிர்க்கட்சியாக விளங்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்-இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வியாழக்கிழமை அறிவித்தனர். இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் தீவிரமாக களப்பணியாற்ற தொடங்கியுள்ளது.
 காங்கிரஸ் கட்சியில் இதுவரை வேட்பாளர் முடிவு செய்யப்படாத நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தனியார் கல்விக்குழும நிர்வாகியும், திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகனுமான ஒருவரை களம் இறக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் அவரது பெயரை என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனத் தலைவர் என்.ரங்கசாமி வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. புதுவை பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம், புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகிய 4 பேரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 கடந்த மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வேட் பாளரான ராதாகிருஷ்ணன் 2 லட்சத்து 55 ஆயிரத்து 826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இப்போதைய முதல்வரான நாராயணசாமி 1 லட்சத்து 94 ஆயிரத்து 972 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தை பிடித்தார். அதிமுக வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 657 வாக்குகளும், திமுக வேட்பாளர் நாஜிம் 60 ஆயிரத்து 580 வாக்குகளும் பெற்றனர்.
 இந்தத் தொகுதியில் 1967 முதல் இதுவரை நடைபெற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 9 முறையும், அதிமுக (1977), திமுக (1998), பாமக (2004), என்.ஆர்.காங்கிரஸ் (2014) ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
 மக்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் உள்ளன. காங்கிரஸ், திமுக, விடுதலைச்சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் உள்ளன. இதனால் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com