வில்லியனூரில் ரூ.8 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்க பூமி பூஜை

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரில் ரூ.8 கோடி மதிப்பில் ஆயுஷ் மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரில் ரூ.8 கோடி மதிப்பில் ஆயுஷ் மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
 வில்லியனூரில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஆயுஷ் மருத்துவமனை கட்டும் பணி ரூ.7.93 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை, முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புதுச்சேரியில் உள்ள ஆயுஷ் தலைமை மருத்துவமனையை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி மேற்கொண்டது. நான் எம்.பி.யாக இருந்தபோது மத்திய அமைச்சரிடம் பேசி அதனை தடுத்து நிறுத்தினேன். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதுதான் ஆயுஷ் மருத்துவத்துக்கு தனியாக துறையை ஏற்படுத்தினார். தேசிய கிராமப்புற சுகாதார இயக்கக (என்ஆர்எச்எம்) ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 இதற்கான கோப்புகளை தயாரித்து அமைச்சரவையில் விவாதித்த பிறகு, படிப்படியாக நிறைவேற்றுவது என முடிவு செய்யப்படும். இங்கு 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை அமைக்கவுள்ளோம். ஹோமியோபதி மருத்துவத்தில் அதிகம் பேர் குணமாவதால் அதற்கு முக்கியத்துவம் தருவதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் தரும் மாநிலம் என்ற பெயரை புதுவை பெறுவதற்கு எல்லோரும் பாடுபட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி இயக்குநர் ஸ்ரீராமலு, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com