பொங்கல் பண்டிகை: புதுவை ஆளுநர், முதல்வர் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் ஆகியோர் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் ஆகியோர் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
 ஆளுநர் கிரண் பேடி: பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. உழவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள், கால்நடைகள், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.
 இந்தத் திருநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகக் கொண்டாடுகின்றனர். இந்த இனிய நாளில், அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 முதல்வர் நாராயணசாமி: மார்கழித் திங்கள் முடிந்து, தைத்திங்கள் உதயமாகிறது. தமிழர்களுக்கு தை முதல் நாளான பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமான திருநாளாகும். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று வள்ளுவரால் வாழ்த்தி உரைக்கப்பட்ட உழவர்களின் திருநாளாகவும் பொங்கல் விளங்குகிறது.
 உலகின் அனைத்து சக்திகளுக்கும் ஆதார சக்தியாக விளங்குவது சூரியன். இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுணர்ந்து, சூரியனுக்குப் படையிலிட்டு, நன்றி செலுத்தும் விழாவாகவும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
 உழவுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் பொங்கல் திருநாள் விளங்குகிறது.
 விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களே இதற்குச் சாட்சியாக உள்ளன. அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றவும் நாம் உறுதியேற்க வேண்டும்.
 வடக்கே மூன்று மாநில விவசாயிகளின் துயர் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல, மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் துயர் நீக்கப்பட வேண்டும். அதற்கு இந்தத் திருநாளில் உறுதியேற்போம். புதுவை மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
 பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: தமிழர்களாகிய நாம் சக மனிதர்களுக்கு மட்டுமன்றி, கால்நடைகளுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிப்பவர்களாக வாழ்ந்து வருகிறோம். பொங்கல் திருநாள் தமிழர்களின் கலாசாரமாகவும், மூச்சாகவும் உள்ளது என்றால் அது மிகையல்ல.
 தை பிறந்தால் வாழ்வுக்கு வழி பிறக்கும் என்பது முன்னோர் கூற்று. அதன்படி, பிறக்கும் தை மாதத்தில் புதுவை யூனியன் பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி, உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் வாழ்விலும் வழி பிறக்க வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com