பிளஸ் 1, 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் கவனத்துக்கு...

பிளஸ் 1,  பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வருகிற 21,  22-ஆம் தேதிகளில்

பிளஸ் 1,  பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வருகிற 21,  22-ஆம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து புதுவை அரசின் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ம.குப்புசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற மார்ச் மாதம் பிளஸ் 1,  பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஜன.21,  22 ஆகிய தேதிகளில் நேரில் வந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 கடந்த ஆண்டு  மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத
விண்ணப்பிக்கலாம்.   பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளியும் 1.3.2019-இல்  15 வயதும் பூர்த்தி அடைந்தவர்களும் "நேரடித் தனித்தேர்வர்களாக' தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். 
 அதேபோல,  கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத் தேர்வை நேரடித் தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்ற அல்லது  பெறாத தேர்வர்கள் அனைவரும்,  எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். பழைய நடைமுறையின்படி (ஒவ்வொரு பாடத்துக்கும் 200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்) தேர்ச்சி பெறாத பாடங்களில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். பழைய முறைப்படி பிளஸ் 2 தேர்வு எழுத எதிர்வரும் ஜூன் மாதம் வரை மட்டுமே இறுதி வாய்ப்பு வழங்கப்படும்.
 பிளஸ் 1 தேர்வர்கள்  ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50 தேர்வுக் கட்டணமாகவும்,  இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும்.  ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50. அதேபோல பிளஸ் 2 தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு கட்டணமாக ரூ.150, இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும்.  ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50. 
 மேலும்,  பிளஸ் 1,  பிளஸ் 2 தேர்வர்கள் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000-ஐ இணை இயக்குநர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் குப்புசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com