தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் ஆளுநர் ஆய்வு

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆளுநர் கிரண் பேடி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். ஆளுநர் மாளிகைக்கு வரும் புகார்களின் அடிப்படையில், அந்தக் குறிப்பிட்ட இடங்களில் அவர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். 
அந்த வகையில், புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் ஆற்றின் முகத்துவாரம் தூர்வாரப்படாமல் இருப்பதால், மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில், ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆளுநர் கிரண் பேடி கேள்வி எழுப்பிய போது, தூர்வாரும் இயந்திரத்துக்கான எரிபொருள் வாங்க போதுமான நிதி இல்லை என பதில் அளித்தனர். பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், நிதியைப் பெற்று தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, வேல்ராம்பட்டு ஏரியில் மரக்கன்றுகளை நடும் பணிகளை ஆளுநர் கிரண் பேடி பார்வையிட்டார். இந்த ஏரியில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிரந்தரமாக படகு சவாரிக்கு ஏற்பாடு செய்து, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நடவடிக்கைகளில் புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். 
மரப்பாலம் சந்திப்பு பகுதியில் முன்மாதிரி சிக்னல் அமைக்க சாலைப் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது, பொதுப் பணித் துறை முதன்மைப் பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, உழவர்பேட்டை நகராட்சி ஆணையர் கந்தசாமி, புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சேகர், வனத் துறைத் துணை வனப் பாதுகாவலர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com