கூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை: டி.கே. ரங்கராஜன்

கூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார்.
கூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை: டி.கே. ரங்கராஜன்

கூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், புதுச்சேரி சாரம் ஜீவா சதுக்கத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 பாஜக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு, மத்தியில் மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கான கடமையை மார்க்சிஸ்ட் கட்சி முழுமையாக நிறைவேற்றும்.
 என்.ஆர். காங்கிரஸ் ஒரு மண்குதிரை. அந்த மண் குதிரையை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது. அது கரை சேராது; கரைந்துவிடும்.
 மதுரையில் எங்களது கூட்டணிக்கு மு.க. அழகிரி ஆதரவளிப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. கூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை. வேட்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதில் தவறில்லை.
 ஜனநாயகத்தைக் பாதுகாப்பது, தொழிலை, விவசாயத்தைப் பாதுகாப்பது, வேலையில்லாதவர்களுக்கு வேலையளிப்பது ஆகிய கடமைகளிலிருந்து மத்திய பாஜக அரசு தவறிவிட்டது.
 தொழில் வளர, வேலைவாய்ப்பு பெருக, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க பதவியிலிருந்து நரேந்திர மோடி அகற்றப்பட வேண்டும்.
 அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்த மத்திய பாஜக அரசை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்புதான் இந்தத் தேர்தல்.
 பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் புதுச்சேரி உள்பட நாட்டில் உள்ள வணிகர்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் புதுவையில் தொழில்கள் பாதிக்கப்பட்டு, மிக மிகப் பின்தங்கிய மாநிலமாக மாறி வருகிறது.
 புதுவை மாநில ஆளுநர், அரசியல் சட்டத்தின் காவலர் என்பதற்குப் பதிலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படாமல் செய்வதற்கான நடவடிக்கைகளையே மேற்கொள்கிறார்.
 தில்லி, புதுவை ஆளுநர்கள் ஆர்.எஸ்.எஸ். வேலையையே செய்கின்றனர்; ஆளுநரின் வேலையை பார்ப்பதே இல்லை. புதுவை, தில்லி ஆளுநர்கள் மாற்றப்பட வேண்டும்.
 அதற்கு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார் ரங்கராஜன்.
 தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்குப் புதுச்சேரி பிரதேசக் குழுச் செயலர் ஆர். ராஜாங்கம் தலைமை வகித்தார். உழவர்கரை செயலர் ஆர். நடராஜன் வரவேற்றார்.
 மத்தியக் குழு உறுப்பினர் சு. சுதா, தமிழ் மாநிலக் குழு நிர்வாகிகள் ஆறுமுக நயினார், வெ.பெருமாள் உள்படப் பலர் பங்கேற்றனர். நிறைவில் நகரக் குழு உறுப்பினர் ஜோதிபாசு நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com