தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாடு இன்று தெரியும்

தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்று

தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம் தெரிவித்தார்.
 புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து, அவரது பதவி பறிக்கப்பட்டு, அத்தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
 தொடர்ந்து தேர்தல் ஆணையமும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பை வெளியிட்டது.
 கடந்த தேர்தலில் இத்தொகுதியில் அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்கிரஸ்) 12,754, சேதுசெல்வம் (இந்திய கம்யூனிஸ்ட்) 5,296 வாக்குகளை பெற்றிருந்தனர். 2-ஆவது இடத்தைப் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் மீண்டும் போட்டியிட திட்டமிட்டிருந்தது. தற்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 கடந்த முறை திமுக முன்வைப்புத் தொகையை பறிகொடுத்து 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2-ஆவது இடத்தைப் பிடித்த தங்களுக்கு தொகுதியை ஒதுக்காததால் திமுக-காங்கிரஸ் மீது புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சி கூட்டத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பங்கேற்கவில்லை.
 இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை முதல்வர் வே.நாராயணசாமி, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து சமரசம் பேசினர். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் 3 மணி நேரத்துக்கும் மேலாக திங்கள்கிழமை நடைபெற்றது.
 இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் சலீம் கூறுகையில், நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெற்று அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மாநிலக்குழு கூடி எங்களின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்றார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறதா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
 கூட்டத்தில் மாநில துணைச் செயலர் வி.எஸ்.அபிஷேகம், பொருளாளர் சுப்பையா, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இரா.விசுவநாதன், கீதநாதன், சேதுசெல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com