புதுச்சேரி கோயில்களில் பங்குனி உத்திர விழா

புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோயில்களில் பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோயில்களில் பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 புதுச்சேரி அருகே பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டும் பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் சிறப்பு அபிஷேக -ஆராதனை, இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தன.
 விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு கார், வேன், பேருந்து, லாரி, நெல் அறுவடை இயந்திரம், பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவற்றை இழுத்து, நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
 மேலும், செடல் அணிந்து அந்தரத்தில் தொங்கியபடியே வந்தனர்.
 இதையொட்டி, புதுச்சேரி
 கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. மேலும், வியாழக்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
 முத்தியால்பேட்டை: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் கங்கை முத்துமாரியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 6-ஆவது ஆண்டாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நடைபெற்றது.
 விழாவில் முத்தியால்பேட்டை, சோலை நகர், சோலைதாண்டவன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
 பிள்ளையார்குப்பம்: புதுவை மாநிலம், பிள்ளையார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சிவ சுப்பிரமணிய சுவாமி கோவியில் செடல் உத்ஸவம் கடந்த சில நாள்களாகச் சிறப்பாக நடைபெற்றது.
 இதையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக -ஆராதனை, சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பக்தர்கள் அலகு குத்தி, தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். செடல் உற்சவத்தின் போது முருகப் பெருமான் தலைக்கவசம் அணிந்து, மோட்டார் சைக்கிள் ஓட்டி வருவது போல, அலங்காரம் செய்திருந்தது பக்தர்களைப் பரவசப்படுத்தியது.
 விழாவில் புதுவை மற்றும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com