கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் வேலைநிறுத்தம்

கிராம நிர்வாக அலுவலர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், சான்றிதழ் விநியோகம் உள்ளிட்டப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள்

கிராம நிர்வாக அலுவலர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், சான்றிதழ் விநியோகம் உள்ளிட்டப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும், மடிக் கணினியுடன் கூடிய  இணையதள வசதி அளிக்க வேண்டும்,  கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை,  மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும்,  உள்பிரிவு பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை ஏற்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
 இதன் ஒரு பகுதியாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். இந்தப் போராட்டம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. 
இதன்படி,  விழுப்புரம் மாவட்டத்திலும் 2 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 375 பேர் ஈடுபட்டுள்ளனர்.  
இவர்கள், வட்டங்கள்தோறும் மக்களைச் சந்தித்து, தங்களது போராட்டத்துக்கான காரணங்கள் குறித்து விளக்கி வருகின்றனர். 
 செவ்வாய்க்கிழமை கண்டமங்கலத்தில் முகாமிட்டு, போராட்ட விளக்க துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.  விழுப்புரம் மாவட்ட செயலர் எஸ்.புஷ்பகாந்தன் தலைமை வகித்தார். 
விழுப்புரம் வட்டத் தலைவர் லட்சுமணன், செயலர் ஜெயராமன்,  பொருளாளர் கமலநாதன், அமைப்புச் செயலர் உத்தரவேல், இணைச் செயலர் உமாபதி,  பிரசார செயலர் ரமேஷ், மகளிரணிச் செயலர் மீனாட்சி,  முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 40 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதேபோல, மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களிலும் சங்கத்தினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் 881 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில், 598 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 
இவர்களில் தற்போது,  375 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கூடுதலாக கவனித்து வந்த  164 கிராம கணக்குகளையும் இவர்கள் திருப்பி அளித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களின் வேலைநிறுத்தத்தால் பொது மக்களுக்கு சான்றிதழ் விநியோகம், அரசு நலத் திட்டப் பணிகள்,  பிறப்பு சான்றிதழ், விவசாயிகளுக்கு அடங்கல் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்த கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் நாகலூர், நைனார்பாளையத்தில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில்  செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். நைனார்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் பி.பெரியாப்பிள்ளை பங்கேற்று பேசினார். 
அதேபோல, கள்ளக்குறிச்சி வட்டம், நாகலூரில் வட்டச் செயலர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.பெரியாப்பிள்ளை கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com