விழுப்புரம்

நெடுஞ்சாலைத் துறை அனுமதிக்காக சுவாமி சிலை ஏற்றிய வாகனம் நிறுத்தம்

DIN


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 380 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கோதண்டராமர் சுவாமி சிலை ஏற்றி வந்த கனரக வாகனம், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அனுமதிக்காக தீவனூரில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு வி.ஆர்.புரம் கோதண்டராமர் கோயிலில் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை அமைப்பதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமக் குன்றிலிருந்து 66 அடி நீளம், 26 அடி அகலம் கொண்ட 380 டன் பாறையை வெட்டி எடுத்து, கோதண்டராமர் சிலையாக வடிவமைக்கப்பட்டது.
இறுதிக் கட்ட சிற்ப வேலைக்காக, சுவாமி சிலை கனரக வாகனம் மூலம் பெங்களூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
வந்தவாசி கொரக்கோட்டையிலிருந்து கடந்த வாரம் புறப்பட்டு 25 கி.மீ. தொலைவு வரை வந்த வாகனம், வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே வெள்ளிமேடுப்பேட்டை கடை வீதியில் செல்ல முடியாமல் நின்றது.
அங்கிருந்த வீடுகள், கடைகளின் முகப்புப் பகுதிகள் லேசாக இடிக்கப்பட்டு, வெள்ளிமேடு கூட்டுச் சாலையில் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் இடிக்கப்பட்ட 45 கடைக்காரர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
இதையடுத்து, சுவாமி சிலை ஏற்றிய வாகனத்தில் உள்ள 240 டயர்களில், அதிக பாரம் காரணமாக 10 டயர்கள் வெடித்து பழுதானதால், அவையும் மாற்றப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலை வாகனம், புறப்பட்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடசிறுவலூர் கிராமத்தில் நிறுத்தப்பட்டது.
சனிக்கிழமை காலை மீண்டும் அந்த கனரக வாகனம் அங்கிருந்து புறப்பட்டு, மாலை 5 மணியளவில் புதுவை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை நோக்கி தீவனூர் வந்து, அங்குள்ள பள்ளி வளாகத்தின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, திண்டிவனம்-செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் (புதுவை-கிருஷ்ணகிரி சாலை)யில் செல்வதற்கு அனுமதி பெறுவதற்காக அந்த கனரக வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவில் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில், நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதால், உரிய அனுமதி பெற்று, ஞாயிற்றுக்கிழமை
காலை தீவனூரிலிருந்து செஞ்சி வழியாக புறப்பட்டுச்செல்ல உள்ளது.
திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமால், திண்டிவனம் ஆய்வாளர் சீனிபாபு தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்படும் சுவாமி சிலைக்கு வெள்ளிமேடுப்பேட்டை முதல் தீவனூர் வரை வழியில் பொது மக்கள் பலர் சூடம் ஏற்றியும், உண்டியலில் காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.
சில கிராமங்களில், இந்த வாகனத்தை நிறுத்தி மக்கள் வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT