விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம்; பரவலாக மழை

கஜா புயல் தாக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கஜா புயல் தாக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையோரங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில், கடலோரப் பகுதியான மரக்காணம் தொடங்கி கோட்டக்குப்பம் வரையிலான பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் வழக்கத்துக்கு மாறாக 20 அடி உயரத்துக்கு எழும்பின. பகலில் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. மாலையிலிருந்து தொடர் மழை பெய்தது. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
 படகுகள் மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் கரையின் மேடான பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தின் பிற பகுதிகளில் புயல் பாதிப்பின்றி மாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது.
 பயணிகள் ரயில் ரத்து: கஜா புயல் எதிரொலியாக சென்னையிலிருந்து மன்னார்குடி, காரைக்கால் போன்ற ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதேபோல, விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு வியாழக்கிழமை மாலை 5.40 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது.
 பேரிடர் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு: முன்னதாக, கஜா புயலை எதிர்கொள்வதற்கு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டிருந்தன. புதன்கிழமை விழுப்புரத்தில் முகாமிட்ட மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் க.பழனிசாமி, மரக்காணம், கோட்டக்குப்பம் கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 53 மீட்புக் குழுவினர் தயார்- அமைச்சர்: இதனைத் தொடர்ந்து, கஜா புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் முக்கியத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அலுவலர் க.பழனிசாமி, அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 விழுப்புரம் மாவட்டத்தில் கஜா புயலின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படலாம் என அடையாளம் காணப்பட்ட 170 இடங்களில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 53 மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பாதிக்கப்படும் மக்கள் தயார் நிலையில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவர். மீட்புப் பணிகளுக்கு அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கவும், குறிப்பாக, மின்சாரம் தடைபடும்போது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய உணவுப் பொருள்கள், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்றார்.
 காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பிரியா, உதவி ஆட்சியர்கள் மெர்சிரம்யா, சாருஸ்ரீ, ஸ்ரீகாந்த், முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் சுந்தர்ராஜன், நகராட்சி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட முக்கியத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com