விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்: 7 இடங்களில் மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துகள் நிகழ்ந்து வரும் நிலையில், 7 முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்


சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துகள் நிகழ்ந்து வரும் நிலையில், 7 முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதில், விழுப்புரம் அருகே இரு இடங்களில் தலா ரூ.25 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் அதிக (1,000 கி.மீ) தொலைவு நெடுஞ்சாலையைக் கொண்ட மாவட்டமாக விழுப்புரம் திகழ்கிறது. இதில், பிரதான தேசிய நெடுஞ்சாலையான சென்னை-திருச்சி சாலை (என்.எச்.45), திண்டிவனம் அருகே தொடங்கி உளுந்தூர்பேட்டை பகுதி வரை 137 கி.மீ வரை செல்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு 3,702 விபத்துகள் மூலம் 834 பேர் உயிரிழந்தனர். நிகழாண்டு, தற்போது வரை 2,750 விபத்துகள் ஏற்பட்டு 472 பேர் வரை உயிரிழந்தனர்.
சென்னை-திருச்சி நெடுஞ்சாலை, 2008-ஆம் ஆண்டு முதல் நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையிலும், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுதோறும், சராசரியாக 600 முதல் 800 வரை உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விபத்துகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது.
25 இடங்கள் பெரும் விபத்து பகுதி: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகளவு விபத்துகள் நிகழ்வதால், காவல் துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் விபத்து பகுதிகள் எவை என ஆய்வு செய்யப்பட்டது. இதில், கூட்டுச் சாலை சந்திப்புகள், உள்ளூர் சாலை குறுக்கிடும் பகுதிகளில் விபத்துகள் அதிகம் நிகழ்வது தெரிய வந்தது.
அவற்றில் 25 இடங்கள் பெரும் விபத்து பகுதியாக அடையாளம் காணப்பட்டு அங்கு தரைகீழ் பாலங்கள், மேம்பாலங்கள், உயர்கோபுர மின் விளக்கு, வேகத் தடைகள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதில், திண்டிவனம் அருகே தென்பசியார் வளைவு, கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு, கேனிப்பட்டு சந்திப்பு, விக்கிரவாண்டி புறவழிச் சாலை முகப்பு, அரசு மருத்துவக் கல்லூரி சந்திப்பு, செஞ்சி நான்குமுனை சாலை சந்திப்பு, எல்லீஸ் சந்திரம் சாலை சந்திப்பு, ஜானகிபுரம் புறவழிச் சாலை தொடங்கும் சந்திப்பு, அரசூர் நான்கு முனை சந்திப்பு, உளுந்தூர்பேட்டை அருகே பாதூர், ஆசனூர் உள்ளிட்ட 25 இடங்கள் பெரும் விபத்துக்கள் நிகழம் பகுதியாக கண்டறிந்து பரிந்துரைத்துள்ளனர்.
இந்த இடங்களில், காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து துறையினர் அவ்வப்போது தடுப்புகளை வைப்பதும், போலீஸார் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டபோதிலும், அதிகாலை, இரவு வேளைகளில் பெரும் விபத்துகள் இங்கு நிகழ்கின்றன.
மேம்பாலங்கள் அவசியமான பகுதி: கூட்டேரிப்பட்டு சந்திப்பு, சென்னை-திருச்சி, மயிலம்-
செஞ்சி-புதுவை சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. கூட்டேரிப்பட்டு சந்தை, அதிக கிராமங்கள் சந்திக்கும் இடம், அதிக வாகனங்கள் கடந்து செல்வதால், பெரும் விபத்துகள் நேர்வதும், சாலையை குறுக்கிடும் பாதசாரிகள் உயிரிழப்பதும் தொடர்கிறது.
இதேபோல, விக்கிவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி சந்திப்பிலும், அவசர ஊர்திகள், பேருந்துகள், பாதசாரிகள் கடப்பதால், தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. விழுப்புரம் புறவழிச் சாலையில், செஞ்சி-திருவண்ணாமலை சாலை சந்திப்பு அதிக வாகனங்கள் கடக்கும் பிரதான இடமாக உள்ளது. அடுத்ததாக, விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலை சந்திப்பில் சாலை வளைவாக இருப்பதுடன், விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
விழுப்புரம் நுழைவு பகுதியான ஜானகிபுரம் புறவழிச் சாலை சந்திப்பு மிகவும் ஆபத்தானதாக உள்ளது. சேலம், திருச்சி வழித்தட வாகனங்கள் வளைவுப் பகுதியில் விழுப்புரம் நகருக்குள் நுழைவதும், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் வெளியேறும் இடமாக உள்ளது.
அதிகளவில் விபத்துகள் ஏற்படும் இந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று கடந்த 2010ஆண்டு முதல் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இதில், செஞ்சி சாலை, எல்லீஸ் சத்திரம் சந்திப்புகளில் விபத்தை தடுக்க வேண்டும் என்று, விழுப்புரத்தைச் சேர்ந்த அன்னியூர் சிவா, உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
அண்மையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இரு இடங்களில் மேம்பாலங்கள்: இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, மாவட்டத்தில் அதிகம் விபத்துகள் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து, தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்துக்கு பரிந்துரைத்து பரிசீலனையில் உள்ளது. இதில், செஞ்சி சாலை சந்திப்பு, முண்டியம்பாக்கம் பகுதியில், தலா ரூ.25 கோடி மதிப்பீட்டில் விரைவில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
இதனிடையே, விழுப்புரம் (காட்பாடி) ரயில்வே மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் பிறகு புறவழிச் சாலையில் விபத்துகள் குறையும் என்றார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் டி.வி.சிவாஜி கூறியதாவது:
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் முக்கிய விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்ட 7 இடங்களில் மேம்பாலங்கள், தரைகீழ் பாலங்கள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில், செஞ்சி சாலை, முண்டியம்பாக்கம் பகுதியில் மேம்பாலம் கட்ட அனுமதி கிடைத்துள்ளது.
அங்கு விரைவில் பணிகள் தொடங்கும். அரசூர், ஜானகிபுரம், எல்லீஸ் சத்திரம் பகுதிகளில் பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜக்கம்பேட்டை, கேனிப்பட்டு, சென்டூர் உள்ளிட்ட இடங்களில் ரூ.81 லட்சம் செலவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com