அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவிகளின் கல்வி பாதிப்பதாக புகார்

அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் பயிலும் அனந்தபுரம் அரசு மகளிர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், வகுப்பறைகள் பற்றாக்குறை நிலவுகிறது. இதன்காரணமாக மாணவிகள் கல்வி பாதிப்படைவதாக

அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் பயிலும் அனந்தபுரம் அரசு மகளிர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், வகுப்பறைகள் பற்றாக்குறை நிலவுகிறது. இதன்காரணமாக மாணவிகள் கல்வி பாதிப்படைவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
 செஞ்சி வட்டம், அனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 174 மாணவிகளும், 6 முதல் எட்டாம் வகுப்பு வரை 140 மாணவிகளும் என மொத்தம் 314 பேர் பயில்கின்றனர். இங்கு மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லை.
 14 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
 இந்த நிலையில் 6 முதல் 8ஆம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தலா ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இவர்களும் ஒரு வாரம் அனந்தபுரம் பள்ளியிலும் அடுத்த வாரம் தஞ்சம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியிலும் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளதாம்.
 ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பாடம் நடத்துவதால் மாணவிகள் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
 மேலும், இந்த பள்ளியில் இருந்த பழைய வகுப்பறை கட்டடங்கள், புதிதாக கட்டுவதற்காக இடிக்கப்பட்டு விட்டன. ஆனால், இதுவரை புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை. இதனால், வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவிகள் மரத்தடியில் கல்வி கற்கும் சூழல் உள்ளது.
 இதுகுறித்து, இப்பகுதி மக்கள், மாணவிகளின் பெற்றோர்கள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் அதிக மாணவிகள் பயிலும் அரசு மகளிர் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்றான அனந்தபுரம் பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கை, பாடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், மாணவிகள் கல்வியில் பின்தங்கும் நிலை உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லாததால், இடவசதி இன்றி மாணவிகள் அவதியுறுகின்றனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறையினர் உடனடியாக இந்தப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், புதிய வகுப்பறைகளையும் கட்டித்தர வேண்டும் என்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com