இரு வேறு சாலை விபத்துகளில் அணு மின் நிலைய அதிகாரி உள்பட 6 பேர் சாவு

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் கல்பாக்க அணு மின் நிலைய அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் கல்பாக்க அணு மின் நிலைய அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
 காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் நகரியப் பகுதியைச் சேர்ந்தவர் சேஷாத்திரி மகன் தேவநாதன் (58). இவர் கல்பாக்கம் இந்திராகாந்தி அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் கதிரியக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். இவர், தனது மனைவி மாலினி(48), மகள் ரம்யா(17) ஆகியோருடன் ஈரோட்டில் உள்ள உறவினரைக் காண காரில் புதன்கிழமை காலை புறப்பட்டார். காரை காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினத்தைச் சேர்ந்த பாபு (எ) பசூல் ரகுமான்(34) ஓட்டினார்.
 காலை 9.45 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் ரயில்வே மேம்பாலப் பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மேம்பால தடுப்புக் கட்டை மீது அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் கடுமையாகச் சேதமடைந்தது. காரில் இருந்த தேவநாதன், மாலினி, ரம்யா, ஓட்டுநர் பசூல் ரகுமான் ஆகிய 4 பேரும் இடிபாட்டில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 உயிரிழந்த மாலினி கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தித் துறை மத்தியப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவரது மகள் ரம்யா அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 தகவலறிந்து சின்னசேலம் போலீஸார் விரைந்து வந்து சடலங்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராமநாதன், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்க.விஜயகுமார் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டு விசாரித்தனர். அம்மையகரம் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 மற்றொரு விபத்தில் இருவர் சாவு: புதுச்சேரி மாநிலம், நோணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் செந்தில்வேலன்(20). இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் அன்பழகன் மகன் சதீஷ்(21), இளநீர் வியாபாரம் செய்து வந்தார். பழைய இரு சக்கர வாகனம் ஒன்று வாங்குவதற்காக, இருவரும் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி புதன்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை செந்தில்வேலன் ஓட்டினார்.
 விழுப்புரம் அருகே வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில் வந்தபோது செந்தில்வேலன் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிரே விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசுப் பேருந்து இவர்கள் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சதீஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த செந்தில்வேலனை வளவனூர் போலீஸார் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com