வளவனூரில் இரு தரப்பினர் மோதல்: சாலை மறியல், போலீஸ் குவிப்பு

விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் செவ்வாய்க்கிழமை மாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. நடவடிக்கை கோரி, மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது

விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் செவ்வாய்க்கிழமை மாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. நடவடிக்கை கோரி, மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
 வளவனூர் இளங்காடு சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் சிலர் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து கடைவீதி வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்யவே, அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு ஒதுங்கி நின்றனர்.
 அப்போது, மாணவியுடன் மாணவர் ஒருவர் நெருக்கமாக நின்று தேவையின்றி பேசியதாகக் கூறி, அவர்களை அந்த வீட்டின் உரிமையாளர் உதயகுமார் அங்கிருந்து போகும்படி கூறினாராம். அப்போது, அந்த மாணவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 இதையடுத்து, வளவனூர் காலனி பகுதிக்குச் சென்ற அந்த மாணவர், அங்கிருந்து சிலரை அழைத்துக் கொண்டு உதயகுமார் வீட்டுக்கு வந்து, அவருடன் தகராறு செய்ததாகத் தெரிகிறது. அப்போது, உதயகுமார், அவரது உறவினர் சீனுவாசன் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
 இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர் கடைவீதி சாலை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த வளவனூர் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது கடை வீதிக்கு வந்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள், காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மறியலை தொடர்ந்த அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
 எனினும், அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சீனுவாசன் கொடுத்த புகாரின் பேரில், வளவனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரைப் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com