கோட்டாட்சியரைக் கொல்ல முயற்சி: நடவடிக்கை கோரி டிஐஜியிடம் மனு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற கோட்டாட்சியர் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்ய முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வருவாய்த் துறை, அரசு ஊழியர்கள் சங்கத்தினர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற கோட்டாட்சியர் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்ய முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வருவாய்த் துறை, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் விழுப்புரம் சரக டி.ஐ.ஜியிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ரத்தினம், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மகேஷ், விருத்தாசலம் வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
 அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 நீதிமன்ற உத்தரவின்படி, சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பகுதியில் நீர் வழிப்பாதை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை அங்கு சென்றனர். அதற்கு அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆறுமுகம், அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆறுமுகத்தின் ஆதரவாளர் ஒருவர் தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததுடன், கோட்டாட்சியர் ராஜேந்திரன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி கொலை செய்ய முயன்றார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
 இதேபோல, விருத்தாசலம் வட்டாட்சியர் ஸ்ரீதரை, காலணியால் தாக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீதும் நடவடிக்கை இல்லை. ஆகவே, இந்த சம்பவங்கள் மீது காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com