வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது அல்ல மார்க்சிஸ்ட்: ஜி.ராமகிருஷ்ணன்

நாட்டின் பொருளாதாரம், தொழில், மொழி வளர்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருவதாக அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம், தொழில், மொழி வளர்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருவதாக அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
 விழுப்புரம் நகராட்சித் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகள் பாதுகாத்திட வலியுறுத்தியும் திங்கள் கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் வரவேற்றார்.
 அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றியதாவது: மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது அல்ல. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
 அதேவேளையில், நாட்டில் பொருளாதாரம், தொழில், மொழி, கலாசார வளர்ச்சிகளுக்காகவும் போராடி வருகிறது. இங்குள்ள என்எல்சி நிறுவனத்தை கடந்த 1950-இல் தொடங்கியபோது, பயனில்லை என அதை மூடுவதற்கு மத்திய அரசு முயன்றது. மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ராமமூர்த்தி, அனந்தநம்பியார் ஆகியோர் சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பி, வெளிநாடுகளுக்கு நிலக்கரியை எடுத்துச் சென்று காட்டி அதன் பயனை வெளிக்கொணர்ந்தனர். இதனால், என்எல்சி செயல்பாட்டுக்கு வந்தது.
 தமிழ் வளர்ச்சிக்காக 1952-இல் முதன் முதலில் சட்டப் பேரவையிலும் தமிழகம் என பெயர் சூட்டுவதற்கு நாடாளுமன்றத்திலும் குரல்கொடுத்தவர்களும் மார்க்சிஸ்ட்டுகள்.
 தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளை தாராளமாக திறப்பதும், அரசுப் பள்ளிகளை மூடுவதும் நடக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். மாற்றுத் திட்டங்கள், மாற்று கொள்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்றார் அவர்.
 தொடர்ந்து, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கலியன், பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், ஏ.கோதண்டம், எஸ்.கீதா, எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன், வீரமணி, ஆர்.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், திரளான கட்சியினர் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com