பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி மாதர் சம்மேளனத்தினர் பிரசார இயக்கம்

பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி, இந்திய தேசிய மாதர் சம்மேளன பிரசாரக் குழுவினர் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி, இந்திய தேசிய மாதர் சம்மேளன பிரசாரக் குழுவினர் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் வன்முறையற்ற இந்தியாவை உருவாக்குவோம், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  
சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலாளர் ஆனி ராஜா தலைமையில், செப்.22-இல் கன்னியாகுமரியில் தொடங்கிய பயணக்குழுவினர் திருச்சி,  கடலூர்,  புதுவை வழியாக செவ்வாய்க்கிழமை விழுப்புரம் வருகை தந்தனர். 
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்தப் பிரசாரப் பயணத்தின் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் ஒய்.தமிழ்ச்செல்வி வரவேற்றார்.  தேசிய மாதர் சம்மேளனத்தின் அகில இந்திய செயலாளர் ஆனி ராஜா, தேசிய செயலாளர் நிஷாசிந்து, மாநிலச் செயலாளர் பி.பத்மாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
மாவட்ட துணைச் செயலர் ஒய்.மேரி, பொருளாளர் எஸ்.தேவி,  பேச்சாளர் சபரிமாலா ஜெயகாந்தன், அம்பேத்கர் பேரவை மகளிரணி அமைப்பாளர் என்.விஜயா நிக்கோலஸ், அனைத்திந்திய பெண்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் செண்பகவள்ளி, மகளிர் விடுதலை இயக்கம் சே.அழகம்மாள்,  உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் கே.ஆண்டாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நாடு முழுவதும் தொடரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள்,  தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்,  பண்பாடு, கலாசாரம் மீதான தாக்குதல் சூழலை விளக்கி பெண்களிடையே விழிப்புணர்வையும், அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய பாஜக அரசும், அதன் ஆதரவு அமைப்புகளும் அரசியல் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகின்றன. பெண்களை பாதுகாப்பதாகக் கூறி சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.   இதனால்,  பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நாடாக இந்தியா மாறி வருகிறது.  
தேசிய ஊரக வேலைத் திட்டத்தை செயல்படுத்துவது குறைந்து விட்டது. சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தால் விவசாயத்தை பாழ்படுத்த முயற்சிக்கின்றனர்.  மதுக் கடைகளை மூடுவதாக வாக்குறுதியளித்த தமிழக அரசு,  கடைகளை அதிகரித்து வருகிறது.  
இந்த வகையிலான மத்திய,  மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது. 
அரசியல் அமைப்புச் சட்டம், ஜனநாயகத்தின் படி மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவும்,  பெண்கள் மீதான தாக்குதல்களை முறியடிக்கவும், பெண்கள் இணைந்து போராட வேண்டும் என்று பிரசார இயக்கத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com