விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 3,227 வாக்குச் சாவடிகளில் 26.94 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளதோடு, பதற்றமான 364 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக மத்திய பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பதாக மாவட்ட

விழுப்புரம் மாவட்டத்தில் 3,227 வாக்குச் சாவடிகளில் 26.94 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளதோடு, பதற்றமான 364 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக மத்திய பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பதாக மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இல.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,659 இடங்களில் உள்ள 3,227 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்குத் தேவையான மின்னணு சாதனங்களும், வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் விவிபாட் சாதனங்களும், கூடுதலாக 25 சதவீதம் அனுப்பி வைத்துள்ளோம்.
364 பதற்றமான வாக்குச் சாவடிகள்: வாக்குச் சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 364 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அங்கு மத்திய பாதுகாப்புப் படை மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வாக்குச் சாவடிகளில் இணையதள கேமரா மூலம் காட்சிகள் பதிவும், நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பும் செய்ய உள்ளனர். மொத்தம் 1,497 வாக்குச் சாவடிகளை இணையதள கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் 287 மண்டல அலுவலர்கள் மூலம்  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்கான பொருள்கள் வாகனங்கள் மூலம் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் 15,673 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். 1,659 வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீஸாருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பங்கேற்றுள்ளனர். வாக்குப் பதிவு நிலவரங்கள்,  அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக தகவல் மையத்தில் பெறப்படும். மையத்தில் முகாமிட்டுள்ள 11 வட்டாட்சியர்கள் இந்தப் பணியை மேற்கொள்வர்.
நேரடி வாக்குகள்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வைப்பதற்கு பாதுகாப்பு அறைகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் உள்ள ஊழியர்களில் 22 ஆயிரத்து 850 பேருக்கு தபால் வாக்குகள் மற்றும் பணிபுரியும் வாக்குச் சாவடிகளில் இடிசி முறையில் வாக்கை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
ரூ.3.53 கோடி பறிமுதல்: தேர்தலையொட்டி, நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.3 
கோடியே 53 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஆவணங்களை வழங்கியவர்களுக்கு ரூ.2.1 கோடி திரும்ப வழங்கப்பட்டது. மீதமுள்ள 
ரூ. ஒரு கோடியே 65 லட்சத்து 
67 ஆயிரம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி, விதி மீறி எடுத்துச் சென்ற ரூ.9.33 லட்சத்திலான 14 ஆயிரத்து 279 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குற்ற நடவடிக்கையுள்ள 1,243 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 161 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
வாக்காளர்கள்...: வாக்காளர் இறுதிப் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 13,48,376 ஆண் வாக்காளர்களும், 13,46,064 பெண் வாக்காளர்களும், 388 திருநங்கைகளும் என மொத்தம் 26 லட்சத்து 94 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். அனைவருக்கும் வாக்குச் சாவடி அடையாளச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதால், அதன் மூலம் வாக்களிக்கலாம். இல்லாதவர்கள், கடவுச்சீட்டு,  ஓட்டுநர் உரிமம், தேசிய ஊரக வேலை அட்டை உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களை காண்பித்தும் வாக்களிக்கலாம்.
தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  தேர்தலை அமைதியாக நடத்திட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் 
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com