மீண்டும் துளிர் விடும் நெகிழிப் பைகள்!

தமிழக அரசின் நடவடிக்கையால் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்கள் பயன்பாடு கனிசமாக குறைந்த நிலையில்,  தினசரி


தமிழக அரசின் நடவடிக்கையால் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்கள் பயன்பாடு கனிசமாக குறைந்த நிலையில்,  தினசரி சேகரமாகும் நெகிழி குப்பைகள் 50 சதவீதம் குறைந்துள்ளன. கண்காணிப்பு தளர்ந்ததால் மீண்டும் நெகிழிகள் துளிர்விடத் தொடங்கிவிட்டன.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழியை ஒழிக்கும் வகையில்,  ஒருமுறை பயன்படுத்தி தூக்கிஎறியப்படும் நெகிழிப் பொருள்களுக்கு,  ஜனவரி முதல் தடை விதித்து  அரசு அமல்படுத்தியுள்ளது. நெகிழிப் பைகள்,  டீ கப்புகள்,  தெர்மாகோல் தட்டுகள்,  குடிநீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட 13 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்தும்,  அதற்கு மாற்றாக வாழை இலை,  பாத்திரங்கள்,  பீங்கான் பொருள்கள்,  துணிப் பைகள்,  சணல் பைகள்,  காட்டன் காகிதங்கள்,  பாக்குமட்டை தட்டுகள்  போன்றவற்றை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியது.
மேலும், நெகிழிப் பைகளை விற்க, பயன்படுத்த அவகாசம் வழங்கியும் நடவடிக்கை எடுத்தது. இதற்கு பொது மக்கள் தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் அனைத்து மாவட்டங்களிலும் அதிகளவில் புழக்கத்தில் இருந்த நெகிழிப் பைகள்,  தேநீர் கப்புகள்,  தெர்மாகோல் தட்டுகள் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட்டு வந்தன.  துணிக் கடைகளில் தாராளமாக வழங்கி வந்த நெகிழிப் பைகளும் நிறுத்தப்பட்டன.   மாற்றுப் பொருள்களாக,  துணிப்பைகள்,  பாத்திரங்களைக் கொண்டு,  பொதுமக்கள் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.  பூக்கள்,  பழங்கள்,  கீரைகள் போன்றவையும் காகிதங்களில் மடித்து வழங்கப்பட்டு வருகின்றன.  தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்து,  விழிப்புணர்வுப் பணிகளும்,  அதன் விற்பனையையும்,  பயன்பாட்டையும் கண்காணித்து நகராட்சி,  பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வந்தனர்.  இதனால்,  சாலைகள்,  குப்பைத் தொட்டிகளில் குவிந்து கிடந்த நெகிழிப் பைகள் ஒரு மாதத்தில் காணாமல் போயிருந்தன.
மீண்டும் கள்ளச் சந்தையில் நெகிழிப் பைகள்: இந்த நிலையில், கண்காணிப்புப் பணிகள் தளர்ந்து விட்டதால், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் போன்றவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.  வழக்கமான நெகிழிப் பொருள்கள் விற்பனையகம்,  வட மாநிலத்தவர்களின் கடைகளிலும்,  மொத்த விலைக் கடைகளிலும்,  பதுக்கி வைத்து விற்கத் தொடங்கிவிட்டனர். 
விழுப்புரம் மாவட்டத்தில் நெகிழிப் பைகள் பூக்கடைகள்,  பழக்கடைகள்,  பெட்டிக் கடைகள் வரை,   மீண்டும் சகஜமாக புழங்கத் தொடங்கியுள்ளன.  
 இதனால்,  கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நெகிழிப் பொருள்களின் பயன்பாடு 50 சதவீதம் குறைந்தது:
இது குறித்து,  விழுப்புரம் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,  விழுப்புரம் நகரில் 42 வார்டுகளிலிருந்து தினசரி 60 டன் குப்பை சேகரமாகி வெளியேற்றப்படுகிறது.  இதில், 9 முதல் 10 டன் வரை நெகிழிக் குப்பையாக முன்பு கிடைத்து வந்தது. தற்போது தடை காரணமாக  நெகிழி பயன்பாடு 50 சதவீதம் குறைந்துள்ளது.
தினசரி 10 டன் சேகரமாகும் நெகிழிக் குப்பைகள்,   5 டன்னாக குறைந்துள்ளது.  இதுவும் ஏற்கெனவே மக்கள் வாங்கி வைத்திருந்தது என்பதால் வந்துள்ளது.  இன்னும் ஒரு மாதத்தில் முற்றிலும் குறையும். கண்காணிப்புப் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்த உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com