விழுப்புரம் அருகே: காவல் துறை வாகனம் மோதியதில் 3 பேர் சாவு

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்குச் சென்ற காவல் துறை வாகனம் மோதியதில் முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்குச் சென்ற காவல் துறை வாகனம் மோதியதில் முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் இல்ல திருமண விழாவில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், அவர் காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அவரது பாதுகாப்புக்காக, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் (சிஆர்பிஎஃப்) மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் தனித்தனி வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர், புதுச்சேரியிலிருந்து மு.க.ஸ்டாலின் விமானம் மூலமாக சென்னைக்குப் புறப்பட்டார்.  அதன் பிறகு, சிஆர்பிஎஃப் வீரர்கள் இரு வாகனங்களிலும், தமிழக காவல் துறையினர் ஒரு வாகனத்திலும் விழுப்புரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த 3 வாகனங்களும் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்குச் சொந்தமானவை. 

இவற்றில், சிஆர்பிஎஃப் வீரர்கள் 6 பேர் வந்த ஒரு வாகனத்தை விழுப்புரம் ஆயுதப்படைக் காவலர் சரவணன் ஓட்டி வந்தார். மாலை 5.30 மணியளவில், விழுப்புரம் மாவட்ட எல்லையான கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகே வந்தபோது, சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக சாலையில் ஓடி, எதிரே வந்த 2 இருசக்கர வாகனங்கள் மீதும், சைக்கிளுடன் நின்றிருந்த முதியவர் மீதும் மோதி சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்து நின்றது. 

இந்த விபத்தில், சைக்கிளுடன் நின்றிருந்த வளவனூர் அருகே மாங்குப்பத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி(60), இரு சக்கர வாகனங்களில் வந்த விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் பாபு (30), உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையான்குளம் பகுதியைச்சேர்ந்த காசிலிங்கம் மகன் திருமுருகன் (30) ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர், சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

தகவல் அறிந்த வளவனூர் போலீஸார் உயிரிழந்த 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பி. சங்கர் ஆகியோர் நிகழ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com