பயோ-மெட்ரிக் முறை வருகைப் பதிவுக்கு எதிர்ப்பு: துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் நகராட்சியில் பயோ-மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் நகராட்சியில் பயோ-மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் நகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு  பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் துப்புரவு தொழிலாளர்கள் சங்கத் தலைவர் முருகன், செயலர் ஐயப்பன் ஆகியோர் தலைமையில்,  நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முழக்கமிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: 

நகராட்சியில், 157 நிரந்தர துப்புரவுப் பணியாளர்களும், 150 ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகிறோம். அதிகாலை 5 மணிக்கே பணியை தொடங்கி சுழற்சி முறையில் பணியாற்றுகிறோம்.  ஏற்கெனவே,  வருகைப் பதிவேட்டில் காலை 5 மணி,  பகல் 11 மணி,  மதியம் 2 மணி,  மாலை 5 மணி என கையெழுத்திட்டு வருகிறோம். வேலைப்பளு காரணமாக காலை,  மாலை ஆகிய இரு வேளைகளில் மட்டும் கெயெழுத்திட்டுச் செல்கிறோம். 

இந்த நிலையில்,  தற்போது பயோ-மெட்ரிக் வருகைப் பதிவில் 4 முறையும் கைரேகை வைக்குமாறு கூறுகின்றனர். அலுவலக ஊழியர்களுக்கு காலை 10.30,

மாலை 5.30 என இரு முறைகள் கைரேகை வைக்க வேண்டும்.  எங்களுக்கு 4 முறை வைக்க வேண்டும் என்கின்றனர். சாக்கடைப்பணி,  தூய்மைப் பணியில் ஈடுபடும்போது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது கைரேகை வைப்பதற்காக பாதியில் பணியை விட்டு வர முடியாது. வேலையை கிடப்பில் போட்டாலும்  துப்புரவுப் பணியை நாங்கள் தான் செய்ய வேண்டும். வருகைப் பதிவில் ஏமாற்றுவதற்கும் வாய்ப்பில்லை. இதனை கருத்தில்கொண்டு கைரேகை வருகைப் பதிவு முறையை ரத்துசெய்ய வேண்டும். அல்லது இரண்டு முறை மட்டும் வைக்கும்படி மாற்ற வேண்டும் என்றனர்.

இதுகுறித்து,  நகராட்சி ஆணையர் லட்சுமி கூறியதாவது: அரசு உத்தரவின்பேரில் அனைத்து நகராட்சி ஊழியர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமலுக்கு வந்துள்ளது.  திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் நகராட்சிகளில் இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. விழுப்புரத்தில் துப்புரவு ஊழியர்களின் பிரிவு அலுவலகங்களிலேயே இதற்கான வசதி உள்ளதால், வருகைப் பதிவு செய்வதில் பிரச்னை இல்லை. இருப்பினும்,  துப்புரவு ஊழியர்களின் கோரிக்கை குறித்து தலைமையகத்தில் தெரிவித்து இரண்டு முறை மட்டும் வருகைப் பதிவு செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com