ஆக்கப்பூர்வ தேர்தலாக மாற்ற வேண்டும்: விசிக வேட்பாளர் ரவிக்குமார்

வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, மக்களவைத் தேர்தலை ஆக்கப்பூர்வமான முறையில் அணுக வேண்டும் என

வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, மக்களவைத் தேர்தலை ஆக்கப்பூர்வமான முறையில் அணுக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் துரை.ரவிக்குமார் கேட்டுக்கொண்டார்.
 தமிழக அரசியலில் ஒரு காலத்தில் படைப்பாளிகளே கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், தற்போது படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில், தமிழக அரசியலில் எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மையுடன் திகழ்பவர் ரவிக்குமார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர்.
 வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள், கட்சித் தலைமையைவிட ஆளுமை மிகுந்த அறிவுஜீவிகளுக்கு பொதுவாக தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை. ஆனால், விதிவிலக்காக பன்முகத்தன்மை கொண்ட ரவிக்குமாருக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தத் தேர்தலில் விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
 திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். கட்சியின் பொதுச் செயலரான ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். கொள்கை அளவில் தங்களுடன் முரண்பட்டு நிற்கும் பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்துக் களம் காணும் ரவிக்குமார், விழுப்புரத்தில் தேர்தல் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். விழுப்புரத்தில் தேர்தல் பணிகளை திங்கள்கிழமை தொடங்கிய ரவிக்குமார், மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து கூறியதாவது:
 இப்போதெல்லாம் பெரும்பாலான ஊடகங்கள் தேர்தலின்போது வேட்பாளரை நோக்கி செல்கின்றன. ஆனால், உள்ளூரில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து ஊடகங்கள் முழுமையாக எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் உள்ளூர் பிரச்னைகளை நோக்கி வேட்பாளர்களின் கவனம் ஈர்க்கப்படும்.
 தேர்தல் நேரத்தில் குறுக்கு வழியில் சிலர் ஆதாயம் தேட முயற்சிப்பார்கள்.
 ஆனால், அவற்றுக்கு இடம்கொடுக்காமல் ஜனநாயகப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக தேர்தல் நடைபெற ஊடகங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
 இந்தத் தேர்தலைப் பொருத்தவரை நல்ல சூழலியல் தேர்தலாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் நெகிழியில் இருக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 5.12.2018 அன்று நடந்த சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் இது தொடர்பாக நான் விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டேன்.
 அதன்படி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதை வலியுறுத்தித் தேர்தல் ஆணையத்துக்கு மனுக்கள் அனுப்பியிருந்தனர்.
 அதன் அடிப்படையில், இதுபோன்ற புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
 தேர்தல் களத்தில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவோம். மக்களின் கவனத்தை திசை திருப்பி குறுக்கு வழியில் ஒருபோதும் ஆதாயம் தேட முயற்சி செய்யமாட்டேன்.
 நேர்மையான வழியில் வெற்றி பெற்று விழுப்புரம் தொகுதி மட்டுமன்றி, தமிழகம் சார்ந்த முக்கிய பிரச்னைகள் குறித்து மக்களவையில் குரல் கொடுக்க மக்கள் எனக்கு வாய்ப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ரவிக்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com